ADDED : செப் 21, 2024 11:22 PM

பெங்களூரு: இந்தியாவில் இட ஒதுக்கீடு குறித்து, அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது, பெங்களூரு போலீஸ் நிலையத்தில் பா.ஜ., புகார் அளித்து உள்ளது.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன், சீக்கியர்கள் குறித்தும், இட ஒதுக்கீடு பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அவரது பேச்சுக்கு, பா.ஜ., கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு, இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், சமூகங்களுக்கு இடையில் பிரச்னை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாகக் கூறி, ராகுல் மீது பெங்களூரு ஹை கிரவுண்ட் போலீஸ் நிலையத்தில், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி தலைமையில் நேற்று பா.ஜ.,வினர் புகார் செய்தனர்.
பின், நாராயணசாமி அளித்த பேட்டி:
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான பின், ராகுல் முதிர்ச்சி அடைந்து இருப்பார் என்று நினைத்தோம். ஆனால், அவர் இன்னும் முதிர்ச்சி அடையவே இல்லை. மொரார்ஜி தேசாய் ஆட்சிக் காலத்தில், ராகுலின் பாட்டி இந்திரா கைது செய்யப்பட்டார். அதன் பின் நடந்த தேர்தலில், இந்திரா பிரதமர் ஆனார்.
இந்திரா, அமெரிக்கா சென்றிருந்தபோது, எமர்ஜென்சி பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. 'அது, என் நாட்டின் விஷயம். அது பற்றி வெளியே கூற மாட்டேன்' என்றார் இந்திரா. ஆனால், ராகுல் அப்படி இல்லை.
வெளிநாடுகளில் நம் நாட்டைப் பற்றியும், பிரதமர் நரேந்திர மோடியை பற்றியும் அவதுாறாக பேசுகிறார். அவர் மீது புகார் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவில் சீக்கியர்களை பற்றி ராகுல் பேசியதால், அவரை 'நம்பர் 1 பயங்கரவாதி' என, ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு விமர்சித்து இருந்தார்.
அவர் மீது காங்கிரஸ் அளித்த புகாரில், ஹை கிரவுண்ட் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது. அதே போலீசின் நிலையத்தில், ராகுல் மீது புகார் அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.