ADDED : ஜன 21, 2025 07:19 PM
காஷ்மீர் கேட்:குடியிருப்போர் நல சங்கங்களுக்கு நாற்காலிகளை வினியோகித்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் ஆணையத்தில் புதுடில்லி பா.ஜ., வேட்பாளர் பர்வேஷ் வர்மா புகார் அளித்துள்ளார்.
தொகுதி வாக்காளர்களிடையே பணம், சேலைகள், காலணிகள், பிற பொருட்களை வினியோகித்ததாக தேர்தல் அதிகாரிகளிடம் பர்வேஷ் வர்மா மீது ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் பல புகார்களை அளித்துள்ளனர்.
இந்த புகார்கள் மீது தேர்தல் ஆணையமும் டில்லி காவல்துறையும் மவுன பார்வையாளர்களாக இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதி சந்தீப் சிங்கிடம் பர்வேஷ் வர்மா அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
புதுடில்லி தொகுதிக்கு உட்பட்ட குடியிருப்போர் நல சங்கங்களுக்கு ஆம் ஆத்மியின் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் நாற்காலிகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
இது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தெளிவாகக் கண்டறியக்கூடிய குற்றமாகும். மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகவும் உள்ளது. ஏனெனில் கெஜ்ரிவால் வாக்காளர்களை பாதிக்க வெளிப்படையாக லஞ்சம் கொடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் அவர் கூறியுள்ளார்.
இதேபோன்ற புகாரை அரவிந்த் கெஜ்ரிவால் மீது காவல் துறையிலும் அவர் அளித்துள்ளார்.
புகாருடன் ஒரு நபர் தள்ளுவண்டியில் சில நாற்காலிகளை எடுத்துச் செல்வதைக் காட்டும் சான்றையும் பர்வேஷ் வர்மா வழங்கினார். தன்னை கெஜ்ரிவால் அனுப்பியதாக அந்த நபர் ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்து, ஆம் ஆத்மி வெளியிட்ட அறிக்கையில், 'டில்லி மக்கள் குறித்து பா.ஜ.,வுக்கு எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை. அதற்கு பதிலாக கெஜ்ரிவாலுக்கு எதிராக பொய்கள் மற்றும் அவதுாறு பிரசாரங்களை மேற்கொள்கிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.