இட ஒதுக்கீட்டை பா.ஜ., அரசு ரகசியமாக பறித்து வருகிறது: ராகுல் குற்றச்சாட்டு
இட ஒதுக்கீட்டை பா.ஜ., அரசு ரகசியமாக பறித்து வருகிறது: ராகுல் குற்றச்சாட்டு
ADDED : மே 02, 2024 02:00 PM

புதுடில்லி: அரசுப்பணிகளை ஒழித்து தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பா.ஜ., அரசு ரகசியமாக பறித்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதே மோடி அரசின் தாரக மந்திரம். மூங்கில் இல்லை என்றால், புல்லாங்குழல் இசைக்க முடியாது. இதன் அர்த்தம், அரசுப்பணி இல்லை என்றால், இட ஒதுக்கீடு இருக்காது.
கண்மூடித்தனமான தனியார்மயமாக்கல் மூலம், அரசுப்பணிகளை ஒழித்துக்கட்டி , தலித்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பாஜ., அரசு ரகசியமாக பறித்து வருகிறது.
2013ல் பொதுத்துறை நிறுவனங்களில் 13 லட்சம் நிரந்தர பணியிடங்கள் இருந்த நிலையில் 2023ல் அது 8.4 லட்சமாக குறைந்துவிட்டது. பிஎஸ்என்எல், செயில், பெல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்ததன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் 6 லட்சம் பணியிடங்களை ஒழிக்கப்பட்டன. இந்த பணியிடங்கள் தான், இடஒதுக்கீட்டின் பலன்களை அளித்தது.
ரயில்வே உள்ளிட்ட நிறுவனங்களில், அரசுப் பணிகளை ஒப்பந்த முறைக்கு மாற்றியதன் மூலம் ஒழிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிலடங்காதவை. மோடி அரசின் தனியார்மயமாக்கல் என்பது நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பது. இதன் மூலம், தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை பறிப்பது.
பொதுத்துறை நிறுவனங்களை வலிமையாக்குவதுடன், 30 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பி, அனைத்து சமுதாயத்திற்கான வேலைவாய்ப்பு கதவுகளை திறப்போம் என காங்கிரசின் உத்தரவாதமாக அளிக்கிறோம். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.

