ADDED : நவ 01, 2024 11:19 PM

பல்லாரி; சண்டூர் - தனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக, ம.ஜ.த.,வினர் பிரசாரம் செய்வதில் மெத்தனமாக உள்ளனர்.
பல்லாரி மாவட்டம் சண்டூர் - தனி தொகுதிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜ., வேட்பாளர் பங்காரு ஹனுமந்தா போட்டியிடுகிறார். வேட்பு மனுவின் போது, ம.ஜ.த.,வின் அனில்லாட் மட்டும் உடனிருந்தார். அதன் பின், பிரசார கூட்டங்களில் அவரை காணவில்லை.
மீண்டும் காங்., வசம்
பா.ஜ.,வின் வழக்கமான பிரசாரங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு ம.ஜ.த., தலைவர்கள் யாரும் அழைக்கப்படுவதில்லை. இதனால் இயல்பாகவே அக்கட்சியினர் சோர்வடைந்து உள்ளனர்.
இத்தொகுதியில் ம.ஜ.த.,வுக்கு பலம் இல்லாமல் இருக்கலாம். அதேவேளையில் பா.ஜ.,வின் வெற்றி தீர்க்கத்தனமாக இருக்கும்.
இம்மாவட்டத்தில் 2013 வரை பா.ஜ., பலமாக இருந்தது. 1985ல் ஜனதா கட்சி முதன் முறையாக இத்தொகுதியில் காங்கிரசின் ஆதிக்கத்தை உடைத்தது. 2004ல் ம.ஜ.த., சார்பில் போட்டியிட்ட சந்தோஷ் லாட், காங்கிரசை தோற்கடித்தார்.
அவர் கட்சியை விட்டு விலகிய பின்னரும், ம.ஜ.த., பலமாகவே இருந்தது. ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் ம.ஜ.த.,வின் பழைய வேர்கள், சண்டூரில் உயிர்ப்புடன் உள்ளன.
ஆனாலும், ம.ஜ.த.,வின் உண்மையான தலைவர்களை, பா.ஜ.,வினர் கண்டு கொள்ளவில்லை. தேர்தல் பொறுப்பேற்றுள்ள ஜனார்த்தன ரெட்டியோ, மாவட்ட ம.ஜ.த., தலைவர்களை ஒருமுறை கூட அழைத்து உதவி கேட்கவில்லை.
பா.ஜ., நடத்தும் பிரசாரத்தில் ம.ஜ.த.,வின் உள்ளூர் தலைவர்கள் இருப்பதை தவிர, ம.ஜ.த.,வின் கொடிகள் தென்படவில்லை. இதனால் தொகுதியில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி என்பது வெறும் வார்த்தையில் மட்டுமே உள்ளது.
பா.ஜ., குற்றச்சாட்டு
அதேவேளையில் மாநில ம.ஜ.த., தலைவர்கள், சண்டூர் தொகுதியை மறந்துவிட்டனர். அனைவரும் சென்னப்பட்டணாவில் இருப்பதாக பா.ஜ.,வினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
சென்னப்பட்டணாவில் நிகில் வேட்பு மனு தாக்கலின் போது, முன்னாள் முதல்வர் எடியூரப்பா சென்றார்.
ஆனால் சண்டூருக்கு ம.ஜ.த.,வின் முக்கிய தலைவர்கள் யாரும் இங்கு வரவில்லை.
அதுமட்டுமின்றி, ம.ஜ.த., நட்சத்திர பிரசாரகர் பட்டியலில் எந்த மாவட்ட தலைவரின் பெயரும் இல்லை. இதனால் சண்டூரில் பா.ஜ.,வுக்கு உதவ ம.ஜ.த.,வினர் மறந்துவிட்டதாக பேச்சு அடிபடுகிறது.
வருவாரா குமாரசாமி?
நவ., 8ம் தேதிக்கு முன், சண்டூருக்கு எந்த நாளிலும் பிரசாரம் செய்ய வருவேன் என்று மத்திய அமைச்சர் குமாரசாமி உறுதி அளித்துள்ளார்.
மறுபுறம் தொகுதியை ஒன்பது மண்டலங்களாக பிரித்து, பிரசாரம் செய்து வரும் பா.ஜ.,வினர், ஒவ்வொரு மண்டலத்துக்கும் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளது.
இந்த பட்டியலில் ம.ஜ.த.,வின் கரேம்மா நாயக் உள்ளார்.
மாவட்ட ம.ஜ.த., தலைவர்கள் கூறுகையில், 'ஜனார்த்தன ரெட்டியோ, வேட்பாளரோ, பா.ஜ.,வினரோ எங்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. இருப்பினும், கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக நாங்கள் பங்கேற்கிறோம்.
'அனைத்து கூட்டங்களுக்கும் பிரசாரம் செய்ய ம.ஜ.த., தலைவர்களை அழைத்து வருகிறோம். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை' என்கின்றனர்.
பா.ஜ., வேட்பாளர் பங்காரு ஹனுமந்தாவுக்கு முன்னாள் அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலு பிரசாரம் செய்தனர்.