பாகிஸ்தானின் பாராட்டை பெற காங்கிரசில் போட்டி: பா.ஜ.,
பாகிஸ்தானின் பாராட்டை பெற காங்கிரசில் போட்டி: பா.ஜ.,
ADDED : மே 04, 2025 04:04 AM

புதுடில்லி: 'பிரதமர் மோடிக்கு எதிராகவும், நம் நாட்டுக்கும் எதிராகவும் பேசி, பாகிஸ்தானின் பாராட்டைப் பெறுவதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது' என, பா.ஜ., விமர்சித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.
கடந்த, 2019ல் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்குள் நுழைந்து நம் படைகள் துல்லிய தாக்குதலை நடத்தின.
இதற்கு ஆதாரம் உள்ளதா? என காங்கிரசைச் சேர்ந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி சமீபத்தில் கேள்வி எழுப்பினார்.
இதுபோல, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதில் தயக்கம் ஏன்? என, அக்கட்சியைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு பதிலளித்து, பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று கூறியதாவது:
காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையையும் ஆதரிக்கிறோம் என, கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.
மேலும், இந்த விஷயத்தில் நாட்டுக்கு எதிராகவோ, அரசுக்கு எதிராகவே விமர்சிக்க வேண்டாம் என, கட்சியினருக்கு அறிவுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றிஉள்ளனர்.
ஆனால், செயற்குழு தீர்மானத்தை மீறி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக அக்கட்சியைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விஷயத்தில் காங்கிரஸ் செயற்குழு என்பது, பாகிஸ்தான் செயற்குழுவாக செயல்படுகிறது.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சியினர், மத்திய அரசை விமர்சித்தனர்.
இதற்கு பாகிஸ்தான் அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மத்திய அரசையும், பிரதமரையும் விமர்சித்தார். அதற்கும் பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்தது.
இதையடுத்து, பாகிஸ்தானின் பாராட்டைப் பெறுவதற்காக, காங்கிரசைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி என, பல தலைவர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.
இதில் இருந்து காங்கிரஸ் எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளது என்பது தெளிவாகிறது. தொடர்ந்து அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆக்சிஜ-ன் வழங்கி வருகின்றனர். அதற்காகவே அரசை விமர்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

