தேர்தல் பிரசாரத்தை பார்க்க 10 நாடுகளின் 18 அரசியல் கட்சிகளுக்கு பா.ஜ., அழைப்பு
தேர்தல் பிரசாரத்தை பார்க்க 10 நாடுகளின் 18 அரசியல் கட்சிகளுக்கு பா.ஜ., அழைப்பு
ADDED : மே 01, 2024 05:06 PM

புதுடில்லி: இந்தியாவில் நடைபெறும் லோக்சபா தேர்தல் பிரசாரத்தைக் காண, 10 நாடுகளில் உள்ள 18 அரசியல் கட்சிகளுக்கு பா.ஜ., அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடந்தது. மீதமுள்ள ஐந்து கட்ட தேர்தல், மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் லோக்சபா தேர்தல் பிரசாரத்தைக் காண, 10 நாடுகளில் உள்ள 18 அரசியல் கட்சிகளுக்கு பா.ஜ., அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் லிபரல் கட்சி, வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சி, வங்கதேசத்தின் அவாமி லீக், இஸ்ரேலின் லிகுட் கட்சி, உகாண்டாவின் தேசிய எதிர்ப்பு இயக்கம் மற்றும் ரஷ்ய அதிபர் புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சியை சேர்ந்தவர்களுக்கு பா.ஜ., சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, நேபாளத்தைச் சேர்ந்த ராஷ்ட்ரிய ஸ்வதந்த்ரா கட்சியை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் அழைப்பு கடிதம் பா.ஜ., சார்பில் அனுப்பப்பட்டு உள்ளது. 18 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பா.ஜ.,வின் அழைப்பின் பேரில், லோக்சபா தேர்தலின் நேரடி அனுபவத்தைப் பெறுவதற்காக இந்தியாவுக்கு வருகை தரவுள்ளனர்.