ADDED : ஜூலை 30, 2025 12:50 AM

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு தேர்தல் ஜுரம் இப்போதே சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
உள்ளூர் பா.ஜ., தலைவர்கள் தேர்தல் வேலைகளில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே சுறுசுறுப்பாக இறங்கி விட்டனர்.
அதே நேரம், கட்சி மேலிடம் எடுத்த ஒரு முடிவு, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பிரகாசமான வாய்ப்பை மங்க செய்து விடும் அளவுக்கு பூதாகரமாகி இருக்கிறது.
கைது நடவடிக்கை பா.ஜ., ஆளும் ஒடிஷா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டிருப்பது தான் தற்போதைய சர்ச்சைக்கு காரணம்.
இத்தனைக்கும் அவர்கள் இந்தியர்கள் என்பதற்கான ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்துஇருந்தனர்.
இதனால், மேற்கு வங்கம் முழுதும் பா.ஜ., வுக்கு எதிரான அலை வீசத் துவங்கி இருக்கிறது.
தேசிய பாதுகாப்பு கருதியே இந்த கைது நடவடிக்கை என விளக்கம் அளிக்க முயன்று வருகிறது பா.ஜ.,வின் தேசிய தலைமை. ஆனால், உள்ளூர் மக்களின் குரலோ, இந்த விவகாரத்தில் வேறு விதமாக ஒலிக்கிறது.
''குஜராத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வந்த என் உறவினரை, வங்கதேசத்தில் இருந்து வந்தவர் என்கின்றனர். சொந்த மக்களை இப்படி நடத்துவது தான் அழகா?,'' என கேட்கிறார் முர்ஷிதாபாதை சேர்ந்த பர் வேஸ் ஷேக். உறவினர் இந்தியர் தான் என்பதற்கு சான்றாக வாக்காளர் அடையாள அட்டையையும் காண்பிக்கிறார்.
மால்டாவில் உள்ள பெயர் சொல்ல விரும்பாத பா.ஜ., தொண்டர் ஒருவரோ, இந்த விவ காரம், கட்சிக்குள் ஒருவித மான குழப்பத்தை அதிகரித்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்.
''நாங்களும் வங்கமொழி பேசுபவர்கள் தான். இதே சமூகத்துடன் நெருக்கமாக இருந்து வருகிறோம். ஒரு முறை தவறு என்ற நினைப்பு அவர்களுக்கு வந்துவிட்டால், அதன் பின் சமரசம் செய்வது மிகவும் கடினம்,'' என்கிறார்.
வங்க கலாசாரத்தை முன்னிலைப்படுத்தி பா.ஜ., மீது மக்களுக்கு மெல்ல நம்பிக்கையை ஏற்படுத்தி வந்த சூழலில், இத்தகைய நடவடிக்கைகள் நிச்சயம், தேர்தல் சமயத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற கருத்தும் ஆணித்தரமாக முன் வைக்கப்படுகிறது.
நாடு முழுதும் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கத்தை முன்னெடுத்த பா.ஜ., தலைவர்கள், மேற்குவங்கத்தில் கட்சியை வளர்க்க 'ஜெய் மா காளி, 'ஜெய் மா துர்கா' என்ற முழக்கத்திற்கு மாறியிருந்தனர்.
பொதுவெளிகளில் தோன்றும் போதெல்லாம் ரவீந்திரநாத் தாகூர், பக்கிம் சந்திர சாட்டோபாத்யாய மற்றும் வங்க ஆன்மீக தலைவர்களின் புகழ் பாடுவதை மறக்கவில்லை.
இமாலய பணி மேற்குவங்கத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூட, வங்க கலாசாரத்தை உயர்த்தி பிடித்தார்.
ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடும் என அடித்து கூறுகிறார் தேர்தல் வியூக வகுப்பாளரான நிலன்ஜன் போஸ்.
பா.ஜ. ,வின் இந்த முரண்பாடான நிலைப்பாடு, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் வா ய்ப்பாக அமைந்து விட்டது. வங்க மக்களுக்கு எதிரான கட்சி பா.ஜ., என, மிக எளிதாக பரப்புரை செய்வதற்கும் வழி அமைத்திருக்கிறது.
தற்போது மேற்குவங்க தேர்தல் களத்தில் ஏற் பட்டிருக்கும் இந்த முரண்பாட்டை களைவது என்பது இமாலய பணி தான் என்கின்றனர் உள்ளூர் பா.ஜ., தொண்டர் கள்.
மேற்குவங்கம் மிக விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இந்த சித்தாந்த கண்ணிவெடிகளை மிக கவனமாக கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பா.ஜ., தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உள்ளூர் பா.ஜ.,வினருக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் உண்மையான சவால், தேர்தலில் வெற்றி பெறுவது அல்ல; இருப்பை தக்க வைத்துக் கொள்வதில் தான் இருக்கிறது.
- நமது சிறப்பு நிருபர் -