'14 கோடி உறுப்பினர்களுடன் பா.ஜ., மிகப்பெரிய கட்சி': பாஜ தேசிய தலைவர் நட்டா
'14 கோடி உறுப்பினர்களுடன் பா.ஜ., மிகப்பெரிய கட்சி': பாஜ தேசிய தலைவர் நட்டா
ADDED : செப் 14, 2025 11:53 PM

விசாகப்பட்டினம்: ''மொத்தம் 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ., விளங்குகிறது,'' என, மத்திய அமைச்சரும், அக்கட்சியின் தேசிய தலைவருமான நட்டா தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், பா.ஜ., சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்று அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா பேசியதாவது:
மொத்தம் 14 கோடி உறுப்பினர்களை கொண்டு, உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பா.ஜ., விளங்குகிறது. நம் நாட்டில், 20 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், 13 மாநிலங்களில் பா.ஜ., அரசும் உள்ளன. பா.ஜ., தான் நாட்டின் மிகப்பெரிய பிரதிநிதித்துவ கட்சியாக உள்ளது.
பா.ஜ.,வுக்கு லோக்சபாவில் 240 எம்.பி.,க்கள் உள்ளனர். கட்சியில் 1,500 எம்.எல்.ஏ.,க்களும், 170க்கும் மேற்பட்ட எம்.எல்.சி., எனப்படும் மேல்சபை உறுப்பினர்களும் உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த 11 ஆண்டுகளில் செயல்திறன் மற்றும் பொறுப்புள்ள அரசு அமைந்துள்ளது. மக்களுக்கு பதிலளிக்கும் அரசாகவும் உள்ளது.
மத்தியில் ஆட்சியில் இருந்த முந்தைய அரசு, வளர்ச்சிப் பணிகள் எதையும் செய்யவில்லை. ஏற்கனவே, ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் மறந்துவிட்டனர். குடும்ப அடிப்படையிலான அரசியல், ஊழல் மற்றும் கட்சியில் உள்ளவர்களை திருப்திபடுத்தும் செயல்கள்தான் இருந்தன.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆந்திராவில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளைப் பட்டியலிட்ட நட்டா, தலைநகர் அமராவதியின் கட்டுமானத்திற்காக மத்திய அரசு 15,000 கோடி ரூபாயை வழங்கியுள்ளது என்றார்.