'ஆப்பரேஷன் தாமரை' துவக்கம் பா.ஜ., தலா ரூ. 15 கோடி பேரம் ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் புகார்
'ஆப்பரேஷன் தாமரை' துவக்கம் பா.ஜ., தலா ரூ. 15 கோடி பேரம் ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் புகார்
ADDED : பிப் 06, 2025 11:30 PM
விக்ரம்நகர்:“டில்லியில் 'ஆப்பரேஷன் தாமரை'யை பா.ஜ., துவக்கிவிட்டது. எங்களின் ஏழு வேட்பாளர்களுக்கு, கட்சி மாற 15 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளது,” என, ஆம் ஆத்மியின் ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டசபைக்கு நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. நாளை ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் ஆம் ஆத்மியின் ராஜ்யசபா உறுப்பினரான சஞ்சய் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மியின் ஏழு வேட்பாளர்களுடன் பா.ஜ., தரப்பில் இருந்து தொலைபேசியில் பேசியுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பா.ஜ.,வில் சேர தலா 15 கோடி வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.
சில வேட்பாளர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு முன்பே பா.ஜ., தன் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதை, இது தெளிவாகக் காட்டுகிறது. அதனால்தான் இது போன்ற ஒன்றை முயற்சிக்கிறது.
அத்தகைய அழைப்புகளைப் பதிவுசெய்யவும், நேரில் சந்திக்கும் சந்திப்புகளை ஆவணப்படுத்த உளவு கேமராக்களைப் பயன்படுத்துமாறு எங்கள் வேட்பாளர்களை அறிவுறுத்தியுள்ளோம்.
ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் போலியானவை. மசாஜ் மற்றும் ஸ்பா நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளை நம்ப முடியாது. பிப்., 8ம் தேதி வரை காத்திருங்கள். ஆம் ஆத்மி கட்சி தீர்க்கமான பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கும்.
கல்வி, மின்சாரம், தண்ணீர், சுகாதாரம் ஆகிய பிரச்னைகளில் ஆம் ஆத்மி எடுத்த நிர்வாக முடிவுகளை மக்கள் ஆதரித்துள்ளனர்.
தவிர எங்கள் வாக்குறுதிகள், வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் முடிவுகளில் இவை நிச்சயம் எதிரொலிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

