மாசடைந்த யமுனை ஆற்றில் நீராடிய பா.ஜ., தலைவருக்கு உடல்நலக்குறைவு; ஆம்ஆத்மி மீது புகார்
மாசடைந்த யமுனை ஆற்றில் நீராடிய பா.ஜ., தலைவருக்கு உடல்நலக்குறைவு; ஆம்ஆத்மி மீது புகார்
UPDATED : அக் 26, 2024 04:49 PM
ADDED : அக் 26, 2024 04:00 PM

புதுடில்லி: டில்லியில் அசுத்தம் மிகுந்த யமுனை ஆற்றில் குளித்து நீராடிய பா.ஜ., தலைவர் உடல்நிலைக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேர்தல் வாக்குறுதியின்படி, டில்லியில் உள்ள யமுனா நதியை தூய்மைப்படுத்த ஆம்ஆத்மி அரசு தவறி விட்டதாக பா.ஜ., குற்றம்சாட்டி வரும் நிலையில், டில்லி பா.ஜ., தலைவர் விரேந்திர சச்தேவா, யமுனை நதியில் நீராட முடியுமா என்று முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சவால் விட்டார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 24ம் தேதி யமுனை நதியில் சச்தேவா குளித்து வழிபாடு நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, இன்று டில்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாசக் கோளாறு மற்றும் உடல் அரிப்பு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட டில்லி பா.ஜ., யமுனை ஆற்றை தூய்மைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை டில்லி அரசு தவறாக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதை மன்னிக்கும்படி வேண்டி விரேந்திர சச்தேவா யமுனையில் குளித்து வழிபாடு நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.
பா.ஜ.,வின் இந்த விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த டில்லி சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கோபால் ராய், 'பா.ஜ., நாடகமாடுகிறது. யமுனை ஆறு மாசடைவதற்கு உத்தரபிரதேசம், ஹரியானா மாநில அரசுகள் தான் காரணம். அங்குள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆற்றில் கலப்பதனால் தான் அசுத்தம் ஏற்படுகிறது,' எனக் கூறியுள்ளார்.