ADDED : மார் 04, 2024 07:11 AM

பெலகாவி: லோக்சபா தேர்தலை ஒட்டி, இரண்டு நாள் பயணமாக, பா.ஜ., தலைவர் நட்டா இன்று, கர்நாடகா வருகை தருகிறார்.
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும் என்று, பா.ஜ., கூட்டணி இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதனால் பா.ஜ., தேசிய தலைவர்கள் அடிக்கடி கர்நாடகா வந்து, பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால சாதனை பற்றி, மக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் லோக்சபா தேர்தலை ஒட்டி, பா.ஜ., தலைவர் நட்டா இன்று கர்நாடகா வருகை தருகிறார். டில்லியில் இருந்து விமானம் மூலம், இன்று இரவு 8:30 மணிக்கு, பெலகாவி சாம்ரா விமான நிலையம் வருகிறார்.
அவரை கர்நாடகா பா.ஜ., தலைவர்கள் வரவேற்கின்றனர். அதன்பின்னர் பெலகாவியில் உள்ள ஹோட்டலில், பெலகாவி, சிக்கோடி, பாகல்கோட், விஜயபுரா லோக்சபா தொகுதிகளை சேர்ந்த பா.ஜ., தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
நாளை காலை 11:15 மணிக்கு சிக்கோடியில் உள்ள, கித்வாய் மைதானத்தில் நடக்கும் பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதையடுத்து மதியம் 2:15 மணிக்கு பெலகாவி ஐ.டி.சி., ஹோட்டலில், பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்தவர்களிடம், உரையாடல் நடத்துகிறார். அதன்பின்னர் இரவு டில்லி புறப்பட்டு செல்கிறார்.
