பரமேஸ்வர் வீட்டு சுவரில் சாணம் பூச முயன்ற பா.ஜ., தலைவர்கள் கைது
பரமேஸ்வர் வீட்டு சுவரில் சாணம் பூச முயன்ற பா.ஜ., தலைவர்கள் கைது
ADDED : ஜன 17, 2025 07:18 AM

துமகூரு: சாம்ராஜ்பேட்டில் மாடுகளின் மடி அறுக்கப்பட்ட வழக்கில், தவறு செய்தவர்களை காப்பாற்ற முயற்சிப்பதாக கூறி துமகூரில் உள்ள உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வீட்டில் சாணம் பூசி போராட்டம் நடத்த முயன்ற, எம்.எல். ஏ., சுரேஷ் கவுடா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு சாம்ராஜ் பேட்டில் வசித்து வரும் கர்ணன் என்ற விவசாயிக்கு சொந்தமான மூன்று பசு மாடுகளின் மடி கத்தியால் அறுக்கப்பட்டது. இந்த வழக்கில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு யாரோ ஒருவரை கைது செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்க அரசு முயற்சி செய்து வருவதாகவும் பா.ஜ., தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
இந்நிலையில், துமகூரு ரூரல் அலகோடு கிராமத்தில் உள்ள உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வீட்டின் முன், துமகூரு ரூரல் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா, மாவட்ட பா.ஜ., தலைவர் ரவிசங்கர் மற்றும் தொண்டர்கள் நேற்று காலை திடீரென போராட்டம் நடத்தினர்.
அமைச்சரின் வீட்டின் சுவற்றில் மாட்டு சாணத்தை பூசவும் முயற்சி செய்தனர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பா.ஜ., தலைவர்கள், தொண்டர்களை கைது செய்து வேன்களில் ஏற்றி சென்றனர்.
சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அமைச்சர் வீட்டை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது.