கூலி வேலையில் பா.ஜ., தலைவர்கள் முதல்வர் சித்தராமையா காட்டம்
கூலி வேலையில் பா.ஜ., தலைவர்கள் முதல்வர் சித்தராமையா காட்டம்
ADDED : ஜன 29, 2024 07:13 AM
சித்ரதுர்கா: ''அம்பேத்கரின் அரசியலமைப்பு இல்லையென்றால், பா.ஜ.,வின் ரவி, ஈஸ்வரப்பா, அசோக் சட்டசபையில் நுழைந்திருக்க முடியாது. கூலி வேலை செய்திருக்க வேண்டும்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் கூட்டமைப்பு, சித்ரதுர்காவில் நேற்று ஏற்பாடு செய்த, புறக்கணிக்கப்பட்டோர் விழிப்புணர்வு மாநாட்டில், முதல்வர் சித்தராமையா பங்கேற்றார். அவர் பேசியதாவது:
அம்பேத்கரின், அரசியலமைப்பு இல்லாவிட்டால், ஈஸ்வரப்பா, ரவி, அசோக் சட்டசபையில் நுழைந்திருக்கவே முடியாது. வயலில், தோட்டத்தில் கூலி வேலை செய்திருக்க வேண்டும். ஆடு மேய்ப்பவரின் மகனான நான், முதல்வராகிவிட்டேன் என்ற காரணத்தால், என்னை எதிர்க்கின்றனர். அனைத்து ஜாதி, மதங்களின் நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு உதவியான திட்டங்களை செயல்படுத்திய என்னை எதிர்க்கின்றனர்.
உங்களுக்கு ஆதரவு
அனைத்து ஜாதி, மதங்களின் ஏழைகள், நடுத்தர மக்களுக்கு அன்ன பாக்யா, ஷூ பாக்யா, சீருடை பாக்யா உட்பட பல திட்டங்களை செயல்படுத்தினேன். இதற்காக என்னை எதிர்த்தும், நான் மனம் தளராமல் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறேன்.
ஜாதி வேற்றுமை, புறக்கணிப்பு, ஜாதி பாரபட்சம் இருக்கும் வரை இத்தகைய மாநாடுகள் அவசியம் மற்றும் கட்டாயம். அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே, ஜாதி வேற்றுமை, பாகுபாடு ஒழியும் என, அம்பேத்கர் உட்பட, பல மகான்கள் எச்சரித்துள்ளனர். குலம், குலம் என, அடித்துக்கொள்ளாதீர்கள் என, அறிவுரை கூறிய கனகதாசரை, ஒரு ஜாதியுடன் முடக்கி அவமதிக்காதீர்கள்.
ஜாதி பெயரில், சமுதாயத்தை சிதைக்கும், அரசியலமைப்பு எதிரியான பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சை நிராகரியுங்கள். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், ஒடுக்கப்பட்ட சமுதாயங்களின் மக்கள், தங்களின் எதிரி யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை நிராகரித்து, உங்களின் தன்மானத்தை வளர்க்க வேண்டும்.
எச்சரிக்கை
சமூக நியாயம், சமமான வாய்ப்புகளை பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., எதிர்க்கின்றன. அரசியலமைப்பு, இட ஒதுக்கீடு, சமூக நியாய எதிரிகளின் கைகளுக்கு, அதிகாரம் செல்லக்கூடாது என, அம்பேத்கர் எச்சரித்திருந்தார். இதை நாம் மறக்கக் கூடாது.
ஜாதி அடக்குமுறைக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அம்பேத்கர் அரசியலமைப்பை அளித்தார். சாஹு மகாஜன், பசவண்ணர், ஜோதிபா புலே, புத்தர், நாராயண குரு, நால்வடி அரசர், விவேகானந்தர், கனகதாசர் என, பலர் ஜாதி அடக்கு முறையை ஒழிக்க உழைத்தனர். நமது அரசியலமைப்பும் இதே நோக்கம் கொண்டுள்ளது. சில தீய சக்திகள், அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம், மீண்டும் அடக்குமுறை, மூட நம்பிக்கைகளை தொடர முயற்சிக்கின்றனர்.
காந்தராஜுவின் அறிக்கையை, சிலர் படிக்காமல், தெரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாங்கள் அந்த அறிக்கையை நிச்சயமாக ஏற்போம். அதில் பிரச்னைகள் இருந்தால், வல்லுனர்களின் கருத்து பெற்று, முடிவு செய்வோம். மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தால், நாடு முழுதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதாக, ராகுல் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.