சித்து ராஜினாமா கோரி போராடிய பா.ஜ., தலைவர்கள் கைது!: 'மூடா' விவகாரத்தில் காங்., அரசுக்கு தொடர் நெருக்கடி
சித்து ராஜினாமா கோரி போராடிய பா.ஜ., தலைவர்கள் கைது!: 'மூடா' விவகாரத்தில் காங்., அரசுக்கு தொடர் நெருக்கடி
ADDED : செப் 27, 2024 08:13 AM

பெங்களூரு: 'மூடா' முறைகேடு விவகாரத்தில், சித்தராமையாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.,வினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விதான் சவுதாவுக்கு பூட்டு போட முயன்ற பா.ஜ., தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பா.ஜ., நடத்தும் போராட்டங்களால், காங்., அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி நிலவுகிறது.
'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், அதிகார துஷ்பிரயோகம் செய்து, முதல்வர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
* சிறப்பு நீதிமன்றம்
முதல்வர் மீது விசாரணை நடத்துவதற்கு, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார். இந்த அனுமதியை ரத்து செய்ய கோரி முதல்வர் தாக்கல் செய்த வழக்கை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், முதல்வர், அவரது மனைவி, மைத்துனர் மல்லிகார்ஜுனா, நில விற்பனையாளர் தேவராஜ் ஆகிய நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி, மைசூரு லோக் ஆயுக்தா போலீசுக்கு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், பா.ஜ., தலைவர்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்கள் உட்பட பா.ஜ., தலைவர்கள் பலரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
* பூட்ட முயற்சி
காங்கிரஸ் ஆட்சியில் நடந்த முறைகேடுகளை குறிப்பிட்டு, அதற்கு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய கோரி பதாகைகளை பிடித்து கொண்டு, கோஷம் எழுப்பினர். பின், விதான் சவுதாவுக்கு பூட்டு போட முயன்றனர். அவர்களை போலீசார் தடுக்க முற்பட்டனர்.
அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. ஆனாலும், விதான் சவுதாவுக்கு பூட்டு போட முயன்றதால், எதிர்க்கட்சி தலைவர் உட்பட அனைவரையும் போலீசார் குண்டு கட்டாக துாக்கி சென்று கைது செய்தனர். பி.எம்.டி.சி., அரசு பஸ்களில் ஏற்றி சென்று, சாம்ராஜ்பேட்டையில் உள்ள நகர ஆயுதபடை மைதானத்தில் தங்க வைத்தனர். பின், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டத்தின் போது, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியதாவது:
மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் வரை, ஒன்றும் செய்ய முடியாது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். அப்படி என்றால், சட்டசபையை கலைத்து விட்டு, தேர்தலை சந்தியுங்கள். அப்போது, காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு அளித்தால், நாங்கள் போராட்டத்தை கை விடுகிறோம்.
சட்டசபையை கலைக்க முயன்றால், காங்கிரசின் 136 எம்.எல்.ஏ.,க்களில், 135 பேர் முதல்வருக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள். ஜமீர், மஹாதேவப்பா, காகா பாட்டீல் கூட இருக்க மாட்டார்கள். மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் பூஜ்யம். கொள்ளை, ஊழல் அதிகமாகி விட்டது. அமைச்சரவை கூட்டம் நடத்துவதற்கு அதிகாரம் இல்லை.
ராஜினாமா செய்வது மட்டுமே முதல்வருக்கு இருக்கும் ஒரே வழி. தவறு நடந்துள்ளதாக நீதிமன்றங்கள் ஏற்கனவே கூறி விட்டன. லோக் ஆயுக்தா போலீசார், வழக்கு பதிவு செய்வதற்கு முன், ராஜினாமா செய்வது நல்லது.
* சந்தேகம்
எடியூரப்பா முதல்வராக இருந்த போது, நீதிமன்றம் கண்டித்தவுடன் ராஜினாமா செய்யும்படி சித்தராமையா வலியுறுத்தினார். அப்படி என்றால், எடியூரப்பாவுக்கு ஒரு நீதி, சித்தராமையாவுக்கு மற்றொரு நீதியா. அவர் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடித்தால், விசாரணை நேர்மையாக நடப்பது சந்தேகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு போன்று, மாநிலத்தின் பல பகுதிகளிலும் பா.ஜ.,வினர் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.
...பாக்ஸ்...
27_Congress Koliwad கோலிவாட்
ராஜினாமா செய்யுங்கள்
காங்., கோலிவாட் தடாலடி
காங்., மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கோலிவாட், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
தற்போது, வெவ்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கின்றன. அங்கு கட்சிக்கு பின்னடைவு ஏற்பட கூடாது. உயர் நீதிமன்றம், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம், மூடாவில் முறைகேடு நடந்துள்ளதாக கூறியுள்ளது.
எனவே, கட்சியின் நலன் கருதி, தார்மீக பொறுப்பேற்று, உடனடியாக முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும். குற்றமற்றவர் என்று உறுதியான பின், மீண்டும் முதல்வராக பதவி ஏற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவரது பேச்சுக்கு, துணை முதல்வர் சிவகுமார் உட்பட அக்கட்சியின் பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
...புல் அவுட்...
நான் தவறு செய்யவில்லை. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். சட்ட போராட்டம் நடத்துவேன். குஜராத் கோத்ரா கலவரத்தின் போது, அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்தபோது, அவர் ராஜினாமா செய்தாரா.
- சித்தராமையா, முதல்வர்
...புல் அவுட்...
சுரங்க முறைகேடு குற்றச்சாட்டு எழுந்த போது, பெங்களூரு முதல் பல்லாரி வரை சித்தராமையா பாதயாத்திரை நடத்தினார். அப்போது, முதல்வராக இருந்த எடியூரப்பா, அமைச்சராக இருந்த என்னையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இப்போது, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் ராஜினாமா செய்ய மாட்டாரா. 40 ஆண்டுகளாக அவர் செய்த கர்மம், இப்போதை சுற்றி வளைத்துள்ளது.
ஜனார்த்தன ரெட்டி, எம்.எல்.ஏ., கங்காவதி
***