ADDED : டிச 06, 2024 06:52 AM

யாத்கிர்: வக்பு வாரியம் செயல்பாட்டை கண்டித்து, பா.ஜ.,வினர் நேற்று யாத்கிரில் கண்டன ஊர்வலம் நடத்தினர்.
கர்நாடகாவின் பல பகுதிகளில் விவசாய நிலங்கள், கோவில்கள் நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது பலரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. வக்பு வாரியம் குறித்த சர்ச்சை அதிகரித்தது.
இதை கண்டித்து பா.ஜ., போராட்டம் நடத்தி வருகிறது. யாத்கிரில், பா.ஜ., மாநில தலைவர் விஜேயந்திரா தலைமையில், நேற்று கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் பைரதி பசவராஜ், ஸ்ரீராமுலு, ராஜுகவுடா, முன்னாள் எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா, பா.ஜ., மாவட்ட தலைவர் அமினார்டி, விவசாயிகள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம், ஷஹாபூர் நகரின் சிபி கமானில் இருந்து புறப்பட்டு பசவேஸ்வர் வட்டம் வரை சென்றனர். வக்பு வாரியத்தை கண்டித்தும், முடா ஊழல் வழக்கு குறித்தும் தலைவர்கள் பேசினர்.
இதன்பின் பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா கூறுகையில், ''சித்தராமையா, தன் முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொள்ள சர்க்கஸ் செய்கிறார். அவருக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும் இடையே நாற்காலி சண்டை நடக்கிறது. முடா ஊழல் வழக்கை மறைப்பதற்காக நடத்தப்படும் சண்டை என்பதை அனைவரும் உணர வேண்டும்,'' என்றார்.