தடியடி பற்றி விசாரணைக்கு அரசு மறுப்பு மேல்சபையில் பா.ஜ.,வினர் வெளிநடப்பு
தடியடி பற்றி விசாரணைக்கு அரசு மறுப்பு மேல்சபையில் பா.ஜ.,வினர் வெளிநடப்பு
ADDED : டிச 17, 2024 04:45 AM
பெலகாவி: ''பஞ்சமசாலி போராட்டத்தில், தடியடி நடத்தப்பட்டது குறித்து, விசாரணை அவசியம் இல்லை,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதால், அதிருப்தி அடைந்த பா.ஜ., உறுப்பினர்கள், மேல்சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
'பஞ்சமசாலி 2ஏ' இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த போராட்டத்தில், போலீசார் தடியடி நடத்திய விவகாரம், மேல்சபையில் எதிரொலித்தது. இது குறித்து, மேல்சபை கேள்வி நேரத்தில் நேற்று நடந்த விவாதம்:
பா.ஜ., - சி.டி.ரவி: போலீசார் தடியடி நடத்தியதை, உள்துறை அமைச்சர் நியாயப்படுத்துகிறார். அவரது பேச்சு தவறுக்கு துணை போவதை போன்றுள்ளது. இன்று தடியடி நடத்தினர்; நாளை துப்பாக்கி சூடு நடத்துவர். தங்களுக்கு ஆதரவாக அரசு உள்ளது என்ற எண்ணத்தை, போலீசாருக்கு ஏற்படுத்தியுள்ளது.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர்: தடியடி நடத்தியது தொடர்பாக, நீதி விசாரணை உட்பட எந்த விசாரணையும் தேவையில்லை.
(அமைச்சரின் பேச்சால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இது சர்வாதிகார அரசு என, கோஷமிட்டனர்)
அமைச்சர் பரமேஸ்வர்: எதிர்க்கட்சிகள் என்ன கூறினாலும், விசாரணை நடத்த முடியாது.
(அப்போது எதிர்க்கட்சியினர், நீதி விசாரணை நடத்தியே ஆக வேண்டும் என, பிடிவாதம் பிடித்தனர்.
இது குறித்து சபையில் அதிகாரபூர்வ அதிகாரியால் எடுக்கப்படும் முடிவை வெளியிடும்படி, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியிடம், வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர் மறுத்தார்)
சி.டி.ரவி: சபையில் பலமுறை, இது போன்று உத்தரவு பிறப்பித்த உதாரணங்கள் உள்ளன. அரசின் கண்டித்த உதாரணங்களும் உள்ளன.
மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி: பஞ்சமசாலி போராட்டக்காரர்கள் மீது நடந்த தடியடி குறித்து விசாரணை நடத்த வேண்டாம் என, அரசு உறுதியாக உள்ளது. எனவே இது பற்றி அதிகமாக விவாதிக்க அனுமதி அளிக்க முடியாது.
(இதனால் எரிச்சலடைந்த பா.ஜ., உறுப்பினர்கள், இது சர்வாதிகார அரசு, இது தடியடி நடத்தும் அரசு என, கோஷமிட்டபடி சபையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்)
இதன்பின், காந்தி பெலகாவியில் நடத்திய காங்கிரஸ் மாநாட்டின் 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, சிறப்பு விவாதத்தை நடத்தினார்.