எம்.எல்.ஏ., சோமசேகர் வீட்டு முன் பா.ஜ., - ம.ஜ.த.,வினர் போராட்டம்
எம்.எல்.ஏ., சோமசேகர் வீட்டு முன் பா.ஜ., - ம.ஜ.த.,வினர் போராட்டம்
ADDED : பிப் 28, 2024 05:10 AM

யஷ்வந்த்பூர், : ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், கட்சி மாறி ஓட்டு போட்ட பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகருக்கு எதிராக, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் போராட்டம் நடத்தி, கோபத்தை வெளிப்படுத்தினர்.
நடந்து முடிந்த ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டு போட்டார். இது, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியில் பா.ஜ., தலைமை மிகவும் செல்வாக்குடன் உள்ளது. ஆனால், கட்சி மாறி ஓட்டு போடும் அளவுக்கு மாநிலத்தில் செயலற்று உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கட்சிக்கு எதிராக நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக கூறி, அவரது வீட்டு முன், பா.ஜ.,வினர் நேற்று மாலை போராட்டம் நடத்தினர். சாலையில் டயர்களை கொளுத்தி, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவரது உருவ பொம்மைக்கு தீ வைத்து கோபத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையில், ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.சி., ரமேஷ்கவுடா தலைமையில், அக்கட்சியினரும் நேற்று போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில், ''எம்.எல்.ஏ., சோமசேகர், கட்சி மாறி ஓட்டு போடுவதற்காக, காங்கிரசிடம் இருந்து, 25 கோடி ரூபாய் பெற்று கொண்டுள்ளார். அவரை, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்ய வேண்டும்,'' என்றார்.
ஆனால், ராஜ்யசபா எம்.பி., பதவி தேர்தலில், எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறி ஓட்டு போட்டாலும், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், அவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது, என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ., சோமசேகர் கூறுகையில், ''மனசாட்சிப்படி யாருக்கு ஓட்டு போட வேண்டுமோ, அவருக்கு போட்டுள்ளேன். என் தொகுதி வளர்ச்சிக்கு நிதி கொடுத்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன்,'' என்றார்.

