பெண் தொண்டர் பாலியல் புகார் பா.ஜ., - எம்.எல்.ஏ., விடுவிப்பு
பெண் தொண்டர் பாலியல் புகார் பா.ஜ., - எம்.எல்.ஏ., விடுவிப்பு
ADDED : செப் 04, 2025 04:23 AM

பெங்களூரு : பெண் தொண்டர் அளித்த பாலியல் பலாத்கார புகாரில், 'பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா குற்றமற்றவர்' என, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், எஸ்.ஐ.டி., அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 61. இவர் மீது பீன்யாவை சேர்ந்த, 40 வயது பா.ஜ., பெண் தொண்டர், மே 21ம் தேதி பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.
புகாரின்படி முனிரத்னா, அவரது ஆதரவாளர்கள் வசந்த், சென்னகேசவா, கமல் ஆகியோர் மீது, ஆர்.எம்.சி., யார்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முனிரத்னா மீது ஏற்கனவே ஒரு பலாத்கார வழக்கு உள்ளதால், இரு வழக்குகளும் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது.
புகார் அளித்த பா.ஜ., பெண் தொண்டரை, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தினர்.
மருத்துவ பரிசோதனையும் செய்தனர். இதில், முனிரத்னா மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இதனால், 'பலாத்கார வழக்கில், முனிரத்னா குற்றமற்றவர்' என, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், எஸ்.ஐ.டி., நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.
இதுகுறித்து முனிரத்னா கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியில் நான் இருந்தபோது, அவர்களுக்கு நல்லவனாக இருந்தேன். பா.ஜ.,வுக்கு சென்றதும் கெட்டவனாக மாறிவிட்டேன். என் எதிரிகளுக்கு ஒரு வேண்டுகோள். பெண்களை அழைத்து வந்து தயவு செய்து, பொய் புகார் அளிக்காதீர்கள்,'' என்றார்.

