கிறிஸ்துவமா? முஸ்லிமா? ராகுலின் சாதி குறித்து விசாரிக்கனும்; பா.ஜ., எம்.எல்.ஏ.,வால் சர்ச்சை
கிறிஸ்துவமா? முஸ்லிமா? ராகுலின் சாதி குறித்து விசாரிக்கனும்; பா.ஜ., எம்.எல்.ஏ.,வால் சர்ச்சை
ADDED : செப் 14, 2024 03:24 PM

பெங்களூரு: நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வரும் காங்., எம்.பி., ராகுலின் சாதி குறித்து விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ., எம்.எல்.ஏ.,வின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல், அங்கு செய்தியாளர்களிடம் பேசியது பெரும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. சீக்கியர்கள் விவகாரம், இந்தியாவை அவமதித்தது போன்ற பேச்சுக்களுக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சாதி
இந்தக் கருத்துக்கு கர்நாடகாவின் பிஜபூர் நகர தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., பசன்கவுடா பாட்டீல் யத்னால் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ராகுலின் சாதி குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விசாரிக்கனும்
இது தொடர்பாக அவர் கூறியதாவது: அமெரிக்காவுக்கு சென்றுள்ள ராகுல் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறியிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரும் அவருக்கு, எந்த சாதியில் பிறந்தோம் என்பதே தெரியாது. தன்னுடைய மதம் கிறிஸ்துவமா? முஸ்லிமா என்பது குறித்தும் தெரியாது. அதுபற்றி விசாரிக்க வேண்டும். ஒருவேளை அவர் பிராமணத்தைச் சேர்ந்தவன் எனக் கூறினால், அதில், எந்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருப்பார்? ராகுல் காந்தி ஒரு நாட்டுத் துப்பாக்கியைப் போன்றவர். அவரால் எந்த பயனும் இல்லை, எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த லோக் சபா தேர்தலின் போது, தேர்தலில் வெற்றி பெற்றால் நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

