புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க 16ல் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்?
புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க 16ல் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்?
ADDED : பிப் 12, 2025 10:24 PM
சாணக்யாபுரி:முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த டில்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., 48 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை பலத்துடன் விளங்குகிறது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லியில் தனித்து ஆட்சி அமைக்க உள்ளது.
இதை முன்னிட்டு நேற்று தேர்தலுக்கு பின் முதன்முறையாக கட்சி மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சட்டசபைத் தேர்தலில் 22 தொகுதிகளில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து விரிவாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கட்சியின் டில்லி பிரிவு மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா, இணைப் பொறுப்பாளர்கள் அல்கா குர்ஜார், அதுல் கர்க், மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளரும் மத்திய அமைச்சருமான ஹர்ஷ் மல்ஹோத்ரா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை புதிய எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

