மாநகராட்சி வரி வசூலில் குளறுபடி பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டு
மாநகராட்சி வரி வசூலில் குளறுபடி பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டு
ADDED : பிப் 13, 2024 07:05 AM
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில், வரி வசூலில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்யும்படி வலியுறுத்தி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரின் ராஜாஜி நகர் சுரேஷ் குமார், ராஜராஜேஸ்வரி நகர் முனிரத்னா உட்பட, நகரின் மற்ற எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள், நேற்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்தை சந்தித்தனர். அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பின், அவர்கள் அளித்த பேட்டி:
எலஹங்கா விஸ்வநாத்: பெங்களூரு மாநகராட்சி வரி வசூலிப்பதற்கு பதில், கொள்ளை அடிக்கிறது. வரி பாக்கியை வசூலிக்கும் பெயரில், நகர மக்களுடன் யுத்தம் செய்கின்றனர்.
தாமாக முன் வந்து சொத்து அறிவிக்கும் நடைமுறையில், தவறான தகவல் தெரிவிக்கப்பட்ட கட்டடங்களுக்கு, இரண்டு மடங்கு அபராதம், வட்டி வசூலிக்கின்றனர். இது சட்ட விரோதம்.
வரி பாக்கியை செலுத்தும்படி, 76,000 வீடுகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால், மக்களுக்கு பலத்த அடி விழுந்துள்ளது. 30க்கு 40 அளவுள்ள வீடுகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரி செலுத்தும்படி கூறுகின்றனர். இது வரியா அல்லது கொள்ளையா. மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு வந்துள்ளனர்.
ராஜராஜேஸ்வரி நகர் முனிரத்னா: மாநகராட்சிக்கு மோசடி செய்தவர்களை பட்டியலிட்டு, இரட்டிப்பு அபராதம் விதியுங்கள்.
கஷ்டப்பட்டு வீடு கட்டி வாழும் மக்களுக்கு வரிச்சுமை ஏன். மாநகராட்சி சட்டத்தை சரியாக பின்பற்றுவது இல்லை.
வரி விலக்கு அளியுங்கள். இல்லையென்றால் மாநகராட்சி மத்திய அலுவலகத்துக்கு, பா.ஜ., பூட்டு போடும். சொத்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும்.
ராஜாஜிநகர் சுரேஷ்குமார்: திடீரென அபராதம் விதிக்கும் நடைமுறையை நிறுத்தி, தவணை முறையில் வரி செலுத்தி கொள்ளுங்கள். மக்களுக்கு தேவையின்றி தொந்தரவு கொடுக்காதீர்கள்.
வரி பாக்கிக்கு அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும். எங்களின் நியாயமான கோரிக்கையை நிராகரித்தால், நகர் முழுதும் போராட்டம் நடத்துவோம்.