பெண் அமைச்சரை ஆபாசமாக பேசிய பா.ஜ., எம்.எல்.சி., ரவி கைது
பெண் அமைச்சரை ஆபாசமாக பேசிய பா.ஜ., எம்.எல்.சி., ரவி கைது
ADDED : டிச 19, 2024 11:37 PM

பெலகாவி, கர்நாடகா சட்டசபையில், பெண் அமைச்சரை ஆபாசமாக திட்டிய புகாரில், பா.ஜ., -- எம்.எல்.சி., ரவியை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
அம்பேத்கர் பற்றி அமித்ஷா கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மேல் சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ., உறுப்பினர்களும் பதிலடி கோஷம் எழுப்பினர். சபையில் கூச்சல், குழப்பம் நீடித்தது. இதனால் சபையை, அரை மணி நேரத்திற்கு, தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஒத்தி வைத்தார்.
பின், மேல்சபை தலைவரின் அறைக்கு சென்ற மகளிர் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், பா.ஜ., உறுப்பினர் ரவி தன்னை ஆபாசமாக திட்டினார் என்று கூறி கண்ணீர் விட்டார்.
இதையடுத்து, சபையில் உறுப்பினர்கள் பேசிய ஆடியோ குரல் பதிவுகளை சேகரிக்கும்படி ஊழியர்களுக்கு, தலைவர் உத்தரவிட்டார்.
கூட்டம் முடிந்ததும் சபை வளாகத்தில் ரவி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சூழ்ந்த சிலர், 'எங்கள் தலைவி லட்சுமியை பார்த்து எப்படி ஆபாசமாக பேசுவாய்' என கேட்டு, அவரை தாக்க முற்பட்டனர்.
சபை பாதுகாவலர்கள், ரவியை பத்திரமாக அழைத்து சென்றனர். லட்சுமியின் ஆதரவாளர்களும் வெளியேற்றப்பட்டனர். லட்சுமியின் உதவியாளர் அளித்த புகாரை அடுத்து, அங்கு வந்த போலீசார், ரவியை கைது செய்து குண்டு கட்டாக வேனில் ஏற்றி சென்றனர்.