177 நாட்களுக்கு முன்பே நடந்திருக்கணும்; கெஜ்ரிவாலை 'பெருக்கி தள்ளிய' பா.ஜ!
177 நாட்களுக்கு முன்பே நடந்திருக்கணும்; கெஜ்ரிவாலை 'பெருக்கி தள்ளிய' பா.ஜ!
ADDED : செப் 17, 2024 06:56 AM

புதுடில்லி; 177 நாட்களுக்கு முன்பே கெஜ்ரிவால் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று பா.ஜ., எம்.பி., பான்சுரி ஸ்வராஜ் விமர்சித்துள்ளார்.
ஜாமின்
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவால் கடந்த 13ம் தேதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பின்னர் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், 2 நாட்களில் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன், மக்கள் மீண்டும் வாக்களித்த பின்னரே முதல்வராக அமர்வேன் என்று அறிவித்து இருந்தார்.
ராஜினாமா
அறிவித்தபடி கெஜ்ரிவால் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா. மாலை 4.30 மணியளவில் துணை நிலை ஆளுநர் வினய் சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.
48 மணிநேரம்
இந் நிலையில் கெஜ்ரிவாலின் ராஜினாமா அறிவிப்பை பா.ஜ., உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. 177 நாட்களுக்கு முன்னரே கெஜ்ரிவால் ராஜினாமா செய்திருக்க வேண்டும். எதற்காக 48 மணிநேரம் தேவை என்று பா.ஜ., எம்.பி.,யும், மறைந்த மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் மகளுமான பான்சுரி சுவராஜ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சந்தேகம்
அவர் மேலும் கூறியிருப்பதாவது; சுப்ரீம் கோர்ட்டும் இதைத்தான் முன்னரே சுட்டிக்காட்டி உள்ளது. பதவி ஆசைக்காக போட்டி நடக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது. கெஜ்ரிவால் கைது நடவடிக்கை சட்டப்பூர்வமானது என்பது கோர்ட் உத்தரவில் தெரிகிறது.
குற்றம்சாட்டப்பட்டவர்
புலனாய்வு அமைப்புகளிடம் போதிய ஆதாரங்கள் உள்ளதையும் கோர்ட் கண்டறிந்துள்ளது. விசாரணைக்கு சிறிதுகாலம் தேவைப்படுவதால் தான் ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்னமும் குற்றம்சாட்டப்பட்டவர்தான்.
தேர்தல்
லோக்சபா தேர்தலில் கெஜ்ரிவால் கட்சியை நிராகரித்து பா.ஜ.,வை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

