அவதூறு வழக்கில் பதில் அளிக்க பா.ஜ., - எம்.பி.,க்கு அவகாசம்
அவதூறு வழக்கில் பதில் அளிக்க பா.ஜ., - எம்.பி.,க்கு அவகாசம்
ADDED : ஏப் 15, 2025 06:48 PM
புதுடில்லி:ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின், தாக்கல் செய்துள்ள அவதூறு மனு தொடர்பாக பதில் அளிக்க, புதுடில்லி தொகுதி பா.ஜ., - எம்.பி., பான்சுரி ஸ்வரஜ்க்கு நான்கு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின், குற்றவியல் நீதிமன்றத்தில் தக்கல் செய்த மனு:
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி தனியார் 'டிவி'க்கு பேட்டியளித்த பான்சுரி ஸ்வராஜ், என் வீட்டில் இருந்து மூன்று கோடி ரூபாய் பணம், 1.8 கிலோ தங்கம் மற்றும் 133 தங்க நாணயங்கள் மீட்கப்பட்டதாக கூறினார். அப்படி எந்த சம்பவமும் நடக்கவே இல்லை. அரசியல் ஆதாயம் பெறவும், என் மீது அவதூறு பரப்பும் நோக்கிலும் பான்சுரி ஸ்வராஜ் இப்படி அவதூறாகப் பேசியுள்ளார். எனவே, பான்சுரி ஸ்வராஜ் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, பிப்., 20ம் தேதி விசாரணைக்கு வந்த போது, தள்ளுபடி செய்யப்பட்டது. குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்து, சிறப்பு நீதிமன்றத்திம் மார்ச் 22ம் தேதி அப்பீல் செய்தார்.
அந்த மனு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர சிங் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி, ஜெயின் தாக்கல் செய்த சீராய்வு மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு, பான்சுரி ஸ்வராஜுக்கு உத்தரவிட்டு விசாரணையை மே 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

