தள்ளிவிட்டார் ராகுல் ; பார்லியில் பா.ஜ., எம்.பி., மண்டை உடைப்பு; இன்னொருவரும் படுகாயம்
தள்ளிவிட்டார் ராகுல் ; பார்லியில் பா.ஜ., எம்.பி., மண்டை உடைப்பு; இன்னொருவரும் படுகாயம்
UPDATED : டிச 19, 2024 02:05 PM
ADDED : டிச 19, 2024 11:37 AM

புதுடில்லி: அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பா.ஜ., எம்.பி., ஒருவருக்கு மண்டை உடைந்தது. படுகாயம் அடைந்த இன்னொருவர், தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழா விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி கடந்த இரு தினங்களாக இரு அவைகளையும் எதிர்க்கட்சியினர் முற்றுகையிட்டு வருகின்றனர்.
அம்பேத்கர் குறித்து அவதூறு பேசியதற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இன்றைய ராஜ்ய சபா கூட்டத்தில் அமித் ஷா பேச்சு குறித்து விவாதம் நடத்தக் கோரி சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்திருந்தார். இதனால், இன்றும் அவையில் அமித் ஷா குறித்து புயலை கிளப்ப எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் இண்டியா கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியபடி, அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் ராகுல், கனிமொழி உள்ளிட்ட எம்.பி.,க்கள் நீல நிற உடை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சியினரின் போராட்டத்தைக் கண்டித்து பா.ஜ., மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினரும் பதிலுக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் ஒரே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பா.ஜ., எம்.பி., பிரதாப் சந்திரா சாரங்கியின் மண்டை உடைந்தது.
காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் ஏற்பட்ட மோதலில் இன்னொரு பா.ஜ., எம்.பி., முகேஷ் ராஜ்புத் என்பவரும் படுகாயம் அடைந்தார். அவருக்கு டில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
எம்.பி., பிரதாப் சந்திரா சாரங்கி கூறுகையில், 'நான் இருக்கையின் அருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்த ராகுல் காந்தி எம்.பி., ஒருவரை தள்ளிவிட்டார். அவர் என் மீது விழுந்ததில், நான் கீழே விழுந்தேன். இதில், என் தலையில் காயம் ஏற்பட்டது,' எனக் கூறினார்.
இந்த சம்பவம் பற்றி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியதாவது: கண்டிப்பாக உங்களின் கேமராவில் பதிவாகியிருக்கும். பார்லிமென்ட் நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றேன். பா.ஜ., எம்.பி.,க்கள் என்னை தடுத்து நிறுத்தி, தள்ளி விட்டனர். மிரட்டல் விடுத்தனர். அதனால், இப்படி நடந்து விட்டது. இதில் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அம்பேத்கரையும், அரசியலமைப்பையும் அவமதித்ததே இன்றைய முக்கிய பிரச்னையாகும், என்றார்.
இதனிடையே, எம்.பி.,க்கு மண்டை உடைப்பு ஏற்பட்டது குறித்து பா.ஜ., சார்பில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நலம் விசாரிப்பு
பார்லிமென்ட் வளாகத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பா.ஜ., எம்.பி.,க்கள் பிரதாப் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
சிகிச்சை அளிக்கும் டாக்டர் அஜய் சுக்லா கூறியதாவது: எம்.பி.,க்கள் இருவரும் நலமாக உள்ளனர். கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.