போக்குவரத்து பிரச்னைக்கு நான்கு முன்மொழிவுகள் கட்கரியிடம் பா.ஜ., - எம்.பி.,க்கள் தாக்கல்
போக்குவரத்து பிரச்னைக்கு நான்கு முன்மொழிவுகள் கட்கரியிடம் பா.ஜ., - எம்.பி.,க்கள் தாக்கல்
ADDED : ஜன 02, 2025 09:31 PM
புதுடில்லி:தேசிய தலைநகரில் போக்குவரத்து மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்கான நான்கு திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் டில்லி பா.ஜ., - எம்.பி.,க்கள் சமர்ப்பித்துள்ளனர்.
டில்லியில் அமைச்சர் நிதின் கட்கரியை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சரும் கிழக்கு டில்லி எம்.பி.,யுமான ஹர்ஷ் மல்ஹோத்ரா, பா.ஜ., வடகிழக்கு டில்லி எம்.பி., மனோஜ் திவாரி, தெற்கு டில்லி எம்.பி., ராம்வீர் சிங் பிதுரி, புதுடில்லி எம்.பி., பன்சூரி ஸ்வராஜ், மேற்கு டில்லி எம்.பி., கமல்ஜீத் செராவத், சாந்தினி சவுக் எம்.பி., பிரவீன் கண்டேல்வால், வடமேற்கு டில்லி எம்.பி., யோகேந்திர சனோலியா ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்தனர்.
அப்போது, டில்லியின் போக்குவரத்து மற்றும் மாசுபாட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான நான்கு திட்டங்கள் குறித்த அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் பா.ஜ., - எம்.பி.,க்கள் அளித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து மத்திய இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா கூறியதாவது:
டில்லியில் போக்குவரத்து மற்றும் மாசுபாடு தொடர்பான பிரச்னைகளைப் பற்றி மத்திய அமைச்சருடன் விவாதித்தோம். இதுதொடர்பாக நான்கு பரிந்துரைகளை அவரிடம் தாக்கல் செய்துள்ளோம்.
டில்லி - டேராடூன் விரைவுச்சாலை முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் வாகனப் போக்குவரத்துக்காக திறக்கப்பட உள்ளது. டில்லி - மும்பை விரைவுச்சாலையால் இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம், 36 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக குறைத்துள்ளது.
சிவ மூர்த்தியிலிருந்து நெல்சன் மண்டேலா மார்க் வரை சுரங்கப்பாதை அமைக்க பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால், ஐ.ஜி.ஐ., விமான நிலையத்திலிருந்து டில்லிக்கு செல்லும் பயண நேரம் 7-8 நிமிடங்களாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, டில்லி - கத்ரா விரைவுச்சாலையை குண்ட்லி - மனேசர் - பல்வால் (கேஎம்பி) விரைவுச்சாலை மற்றும் 2வது நகர்ப்புற விரிவாக்க சாலையுடன் இணைக்கும் திட்டம் உள்ளிட்ட நான்கு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

