தெலுங்கானா காங்., அமைச்சரவையில் அசாருதீனை சேர்க்க பா.ஜ., எதிர்ப்பு
தெலுங்கானா காங்., அமைச்சரவையில் அசாருதீனை சேர்க்க பா.ஜ., எதிர்ப்பு
ADDED : அக் 31, 2025 05:32 AM

ஹைதராபாத்:  தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், ஆளும் காங்., - எம்.எல்.சி.,யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன் னாள் கேப்டனுமான முகமது அசாருதீனை, மாநில அமைச்சரவையில் சேர்க்க பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் ஹைதராபாதில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபை தொகுதிக்கு, நவ., 11ல் இடைத் தேர்தல் நடக்கிறது.  இதையொட்டி, ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அம லில் உள்ளன.
தெலுங்கானா காங்., செயல் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அசாருதீன், 62, மாநில மேல் சபை உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, தெலுங்கானா அமைச்சரவையில் அவர் இன்று சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அசாருதீனை, அமைச்சரவையில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் பா.ஜ., புகார் மனு அளித்துள்ளது.
அதில், 'ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலில், முஸ்லிம் ஓட்டுகளை பெறவே அசாருதீனை அமைச்சரவையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண் டும்' என, குறிப்பிடப் பட்டுள்ளது.

