முதல்வர் பங்களாவுக்கு ஆடம்பர செலவு கெஜ்ரிவாலை கண்டித்து பா.ஜ., போராட்டம்
முதல்வர் பங்களாவுக்கு ஆடம்பர செலவு கெஜ்ரிவாலை கண்டித்து பா.ஜ., போராட்டம்
ADDED : நவ 21, 2024 09:18 PM
மாண்டி ஹவுஸ்:அரவிந்த் கெஜ்ரிவாலின் முந்தைய பங்களாவில் ஆடம்பரப் பொருட்கள் பயன்படுத்தியதை கண்டித்து, பா.ஜ.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
டில்லியின் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தன் குடும்பத்தினருடன் அவர், பிளாக்ஸ்டாப் சாலை பங்களாவில் வசித்தார். அப்போது, பல கோடிகள் செலவில் பங்களாவை ஆடம்பரமாக அவர் புனரமைத்ததாக பா.ஜ., குற்றஞ்சாட்டி வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் அவர் காலி செய்த பிறகு, பங்களாவின் ஆடம்பர விவகாரங்கள் வெட்ட வெளிச்சமாகின. இதே விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து, தற்போது பிரோஸ் ஷா சாலையில் அவர் வசிக்கும் இல்லம் அருகே நேற்று பா.ஜ., தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா மற்றும் பா.ஜ., - எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.
ஆம் ஆத்மியில் அமைச்சராக இருந்து தற்போது பா.ஜ.,வில் இணைந்துள்ள கைலாஷ் கெலாட்டும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட வீரேந்திர சச்தேவா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் சிலரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 'சட்டம் ஒழுங்கை மீற யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.