கர்நாடக மாஜி முதல்வர் எடியூரப்பா கைது; இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை
கர்நாடக மாஜி முதல்வர் எடியூரப்பா கைது; இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை
UPDATED : ஏப் 03, 2025 01:01 PM
ADDED : ஏப் 03, 2025 08:00 AM

பெங்களூரு: கர்நாடகாவில் அத்தியாசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களில் விலை மளமளவென அதிகரித்திருப்பதாக பா.ஜ., குற்றம்சாட்டி வருகிறது. விலைவாசியை உயர்த்திய காங்கிரஸ் அரசைக் கண்டித்து 24 மணிநேர தொடர் போராட்டத்தை பா.ஜ., அறிவித்தது. மேலும், இந்த ஆட்சியில் விலை உயர்த்தப்பட்ட, பால், பெட்ரோல் உள்ளிட்ட 50 அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலையும் பா.ஜ., வெளியிட்டிருந்தது.
நேற்று (ஏப்.,2) மதியம் முதல் பா.ஜ.,வின் 24 மணிநேர தொடர் போராட்டத்தை விடுதலை பூங்காவில் தொடங்கியது. இதில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நள்ளிரவிலும் இந்தப் போராட்டம் தொடர்ந்த நிலையில், இன்று மதியம் நிறைவடைகிறது. தொடர்ந்து, விலைவாசி உயர்வைக் கண்டித்து ஏப்., 7ம் தேதி மாநிலம் தழுவிய மாபெரும் பேரணிக்கு பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகா அரசைக் கண்டித்து இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

