பீஹாரில் வெற்றியை கொண்டாட தயாரான பாஜவினர்; 501 கிலோ லட்டுக்களை தயார் செய்யும் பணி தடபுடல்
பீஹாரில் வெற்றியை கொண்டாட தயாரான பாஜவினர்; 501 கிலோ லட்டுக்களை தயார் செய்யும் பணி தடபுடல்
ADDED : நவ 12, 2025 04:03 PM

பாட்னா: பீஹாரில் தேர்தல் வெற்றியை கொண்டாட பாஜவினர் தயாராகி வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவர்கள் 501 கிலோ லட்டுக்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. கடந்த, 6ல், 121 தொகுதிகளில் நடந்த முதற்கட்ட தேர்தலில், 65 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், மீதமுள்ள, 122 தொகுதிகளில், நேற்று இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடந்தது. 122 தொகுதிகளில், 67.14 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஓட்டுப்பதிவு முடிந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கணிப்புகள், பா.ஜ.. தலைமையிலான தே.ஜ., கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என தெரிவித்துள்ளன. இன்னும் இரண்டே நாள் தான்; மக்களின் தீர்ப்பு தெரிந்துவிடும். தேர்தல் வெற்றியை கொண்டாட பாஜவினர் தயாராகி வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவர்கள் 501 கிலோ லட்டுக்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இது குறித்து பாஜவினர் கூறியதாவது: தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறுகிறது என்று கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அதற்கு முன்பு, 501 கிலோ லட்டு தயாரிக்க நாங்கள் உத்தரவிட்டிருந்தோம். தற்போது அதற்கான பணிகள் தடபுடல் ஏற்பாடுடன் நடந்து வருகிறது
ஆட்சியில் நீடிக்க எங்களுக்கு ஓட்டளித்த மக்களுக்கு அதை விநியோகிப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் அனந்த் குமார் சிங்கின் வீட்டிலும் கூடாரங்கள் அமைத்து, நாற்காலிகள் அமைத்து, வாக்கு எண்ணிக்கை முடிவுகளை எதிர்பார்த்து வளாகத்தை அலங்கரிக்கத் தொடங்கியுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் ஆதரவாளர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களை வரவேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

