சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., பதிலடி
சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., பதிலடி
ADDED : ஏப் 17, 2025 06:30 AM

புதுடில்லி: ''பொது சொத்துக்களை கொள்ளையடிக்கும், 'லைசென்ஸ்' காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படவில்லை. வெறும் அரசியல் கருத்து கூறுவதை விட்டு, 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் அமலாக்கத்துறை கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும், 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இதை, காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா, அவருடைய மகன் ராகுல் முக்கிய பங்குதாரர்களாக உள்ள, 'யங் இந்தியன்ஸ்' என்ற நிறுவனம் மிகவும் குறைந்த விலைக்கு வாங்கியுள்ளது.
அபகரிக்க முயற்சி
பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்துள்ளதாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில், இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இதில், 988 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி நடந்துள்ளதாக, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், முதல் குற்றவாளியாக சோனியா, இரண்டாவது குற்றவாளியாக ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில், சோனியா மற்றும் ராகுல் பெயரை சேர்த்ததற்கு, காங்கிரஸ் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளது; அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியுள்ளதாவது:
சுதந்திர போராடத்தின்போது, மக்களின் குரலை தெரிவிக்கும் வகையில் துவங்கப்பட்டது, நேஷனல் ஹெரால்டு. இந்த பத்திரிகைக்கான நிலத்தை அரசு வழங்கியுள்ளது. ஆனால், அதை தங்களுக்கு சொந்தமானதாக காங்கிரஸ் பயன்படுத்தி வந்தது.
அதன் அடுத்தகட்டமாக, சோனியா குடும்பத்தினர் அபகரிக்க முயற்சித்துள்ளனர். சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவும், ஹரியானாவில் நில பரிவர்த்தனை மோசடியில் சிக்கியுள்ளார். இது தான், சோனியா குடும்பத்தின் வளர்ச்சி மாடல்.
சட்ட நடவடிக்கை
சோனியா, ராகுல் பெயரை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் நடத்துகின்றனர். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், விசாரணை அமைப்பை மிரட்டும் வகையில் அறிக்கை வெளியிட்டுஉள்ளனர்.
இது, பிரதமர் நரேந்திர மோடியின் அரசு. இந்த ஆட்சியில், சட்டம் தன் கடமையை செய்யும். அதில் அரசு தலையிடாது.
மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் லைசென்ஸ் யாருக்கும் வழங்கப்படவில்லை. அதை அனுமதிக்கவும் மாட்டோம்.
இந்த பிரச்னை தொடர்பாக வெறும் அரசியல் கோஷங்கள் வெளியிடுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக, வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முன்வர வேண்டும். சட்டம், நீதிக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தால், அதை நேர்மையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகையில், சோனியா, ராகுல் பெயர் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர், டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாரணை அமைப்புகளை, மத்திய அரசு ஆயுதமாக பயன்படுத்துவதாக அவர்கள் கோஷமிட்டனர்.