நிகிலை வெற்றி பெற வைக்க ரூ.100 கோடி செலவு குமாரசாமி மீது பா.ஜ., சோமசேகர் 'பகீர்' புகார்
நிகிலை வெற்றி பெற வைக்க ரூ.100 கோடி செலவு குமாரசாமி மீது பா.ஜ., சோமசேகர் 'பகீர்' புகார்
ADDED : ஜன 10, 2025 07:14 AM

பெங்களூரு: ''சென்னபட்டணாவில் தனது மகன் நிகிலை வெற்றி பெற வைக்க, மத்திய அமைச்சர் குமாரசாமி 100 கோடி ரூபாய் செலவு செய்தார்,'' என, பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ., சோமசேகர் தெரிவித்தார்.
யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
பா.ஜ., கட்சி கூட்டத்திற்கு வரும்படி எனக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் நானும் கூட்டத்திற்கு செல்ல மாட்டேன்.
பா.ஜ., தலைவர் விஜயேந்திரா போராட்ட குணம் கொண்டவர். அவரது தந்தை எடியூரப்பா, அண்ணன் ராகவேந்திரா வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறார்.
அரசியலில் அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. அரசியல் ரீதியாக யாரையும் ஒடுக்க வேண்டும் என்று நினைப்பவர் இல்லை. அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லும் பண்பு கொண்டவர்.
கடிவாளம்
ஆனால், விஜயேந்திராவுக்கு எதிராக எத்னால் பேசி வருகிறார். அவரது வாய்க்கு கட்சி மேலிடம் கடிவாளம் போட்டால் நல்லது. காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பா.ஜ., ஆட்சியில் இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி 10 முறை கர்நாடகா வந்து பிரசாரம் செய்தார். ஆனாலும் 66 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது.
காங்கிரஸ், தங்களுக்கு நல்லது செய்யும் என்ற நம்பி மக்கள் 135 எம்.எல்.ஏ.,க்களை கொடுத்துள்ளனர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.
அதை விடுத்து பதவிக்காக சண்டை போடுவது சரியாக இருக்காது. காங்கிரஸ், பா.ஜ.,வில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கின்றனர்.
சமமான மனநிலை
துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிராக, சில அமைச்சர்கள் பேசுகின்றனர். பதிலுக்கு சிவகுமாரும் பேசினால் நிலைமை என்ன ஆகும்.
சிவகுமார் எட்டு முறை எம்.எல்.ஏ., ஆனவர். பல துறைகளில் அமைச்சராக இருந்த அனுபவம் உடையவர். இப்போது துணை முதல்வராக உள்ளார். கட்சியின் மாநில தலைவராகவும் இருக்கிறார்.
சிவகுமாரை டென்ஷன் ஆக்க வேண்டும் என்ற நோக்கில் சிலர் பேசுகின்றனர்.
யார் என்ன செய்தாலும் அவரை டென்ஷன் ஆக்க முடியாது. சமமான மனநிலை கொண்ட அரசியல்வாதி அவர்.
காங்கிரஸ், 60 சதவீத கமிஷன் அரசு என்று மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகிறார்.
சென்னபட்டணா இடைத்தேர்தலில் மகன் நிகிலை வெற்றி பெற வைக்க, குமாரசாமி 100 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளார்.
இதை தொகுதி மக்களே என்னிடம் தெரிவித்தனர். காங்கிரசை கமிஷன் அரசு என்று கூறும் அவர், எவ்வளவு கமிஷன் அடித்து 100 கோடி ரூபாய் செலவு செய்தார் என்பதையும் சொல்ல வேண்டும்.
பொறுப்பான பதவி
மத்திய அமைச்சர் பதவி பொறுப்பான பதவியாகும். அந்த பதவியில் இருந்து கொண்டு வாய்க்கு வந்ததை பேசுவது சரியல்ல.
கர்நாடகா வரும்போதெல்லாம் சித்தராமையா, சிவகுமார் பற்றி மட்டும்தான் அவர் பேசிவிட்டு செல்கிறார்.
சித்தராமையாவுக்கு பின், சிவகுமார் முதல்வர் ஆவாரா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் யார் முதல்வர் ஆனாலும் எனது தொகுதிக்கு நிதி வேண்டும் என்று கேட்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

