இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,
ADDED : ஏப் 24, 2025 11:19 PM
பகர்கஞ்ச்:இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு டில்லி மாநகராட்சியை பா.ஜ., மீண்டும் கைப்பற்றுகிறது. மேயர், துணை மேயருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
மாநகராட்சியின் மொத்த கவுன்சிலர்கள் எண்ணிக்கை 250. டில்லி சட்டசபைக்கு சில கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால் 12 இடங்கள் காலியாக உள்ளன. அதனால் எம்.சி.டி.,யின் தற்போதைய பலம் 238 கவுன்சிலர்கள்.
இந்த இடங்களில் இப்போது பா.ஜ.,வுக்கு 117 கவுன்சிலர்கள் உள்ளனர். இதுவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2022ல் 104 ஆக இருந்தது. அப்போது, ஆம் ஆத்மி கவுன்சிலர்களின் எண்ணிக்கை 134 ஆக இருந்தது.
இது தற்போது, 113 ஆகக் குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எட்டு கவுன்சிலர்கள் மட்டுமே உள்ளனர்.
தேர்தல் அறிவித்த வேளையில் மேயர், துணை மேயர் தேர்தலை புறக்கணிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு போதுமான கவுன்சிலர்கள் இல்லை.
மேயர் தேர்தலில் ஓட்டுப்போட 238 கவுன்சிலர்கள், லோக்சபாவின் ஏழு எம்.பி.,க்கள், ராஜ்யசபாவின் மூன்று எம்.பி.,க்கள், 11 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், மூன்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதியானவர்கள்.
இந்த எண்ணிக்கை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டில்லி மாநகராட்சியை பா.ஜ., எளிதில் கைப்பற்றும் என்பது உறுதி ஆகி உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி நடந்த முந்தைய மேயர் தேர்தலில் ஆம் ஆத்மியின் மகேஷ் குமார் கிஞ்சி, வெறும் மூன்று ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இன்றைய தேர்தலில் பா.ஜ., சார்பில் மேயர் பதவிக்கு ராஜா இக்பால் சிங், துணை மேயர் பதவிக்கு ஜெய் பகவான் யாதவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முறையே மன்தீப் சிங், அரிபா கான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேயர் தேர்தல் இன்று பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக மாநகராட்சியின் சாதாரண கூட்டம் கூட்டப்படுகிறது.
நகரத்தின் பிரச்னைகளைச் சரிசெய்யும் பொறுப்பை பா.ஜ.,விடம் டில்லி மக்கள் ஒப்படைத்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி, ஏற்கனவே தன் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. ஊழலை ஒழித்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கியிருந்த அனைத்து நிலுவையில் உள்ள பணிகளையும் முடிப்போம். மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், நிலைக்குழுக்களுக்கான தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படும்.
ராஜா இக்பால் சிங்,
மேயர் பதவிக்கான
பா.ஜ., வேட்பாளர்
மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. நாங்கள் இதை முற்றிலுமாகப் புறக்கணிப்போம். தன் மூன்று இயந்திர சக்தி என்று பா.ஜ., அழைத்துக் கொள்ளும் உள்ளாட்சித் தேர்தலை ஒரு கேலிக்கூத்தாக மாற்றியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமையின் கீழ், மக்களுக்கு நன்மை கிடைக்கும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் பா.ஜ.,வின் ஒரே நோக்கம், அதிகாரத்தைக் கைப்பற்றுவது.
ஷெல்லி ஓபராய்
முன்னாள் மேயர்