காங்., அரசுக்கு எதிராக போராட பா.ஜ., மேலிடம் உத்தரவு! இன்று முதல் சட்டசபை, மேல் சபையில் காரசாரம்
காங்., அரசுக்கு எதிராக போராட பா.ஜ., மேலிடம் உத்தரவு! இன்று முதல் சட்டசபை, மேல் சபையில் காரசாரம்
ADDED : டிச 15, 2024 11:20 PM
பெலகாவி: 'குளிர்கால கூட்டத்தொடர், இன்னும் நான்கு நாட்களே உள்ளன. எனவே, வட மாவட்டங்களின் பிரச்னைகளை சுட்டிக்காட்டி, அரசை கண்டித்து ஒற்றுமையுடன் போராட்டம் நடத்த வேண்டும்' என, கர்நாடக பா.ஜ.,வினருக்கு மேலிடம் கட்டளையிட்டுள்ளது. இதனால், சட்டசபை, மேல்சபையில் இன்று முதல் காரசார விவாதங்கள் நடக்கும் என தெரிகிறது.
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், கடந்த 9ம் தேதி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியது. கூட்டத்தொடரில் காங்கிரஸ் அரசுக்கு குடைச்சல் கொடுக்க, எதிர்க்கட்சிகளிடம் ஏராளமான அஸ்திரங்கள் இருந்தன. வக்பு வாரியத்தின் நோட்டீஸ் விவகாரம், வால்மீகி மேம்பாட்டு ஆணையம், 'முடா' முறைகேடு என, பல அஸ்திரங்கள் இருந்தும், அவற்றை எதிர்க்கட்சி பா.ஜ., சரியாக பயன்படுத்தவில்லை.
----ஒற்றுமை
பா.ஜ.,வின் உட்கட்சிபூசலே, ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு அஸ்திரமாக அமைந்துள்ளது. சட்டசபையில் பா.ஜ.,வை, காங்கிரஸ் நெருக்கடியில் சிக்க வைக்கிறது என, ஊடகங்களில் செய்தி வெளியானது. இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது.
இந்த கூட்டத்தொடரில் இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே மிச்சம் உள்ளன. எனவே இந்த நான்கு நாட்களும், வட மாவட்டங்களின் பிரச்னைகளை சுட்டிக்காட்டி, ஒற்றுமையுடன் போராட்டம் நடத்த வேண்டும் என, கர்நாடக பா.ஜ.,வுக்கு மேலிடம் கட்டளையிட்டுள்ளது.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உட்பட, முக்கிய தலைவர்களை, மாநில பொறுப்பாளர் ராதா மோகன் அகர்வால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மிச்சமுள்ள நான்கு நாட்களும், ஒற்றுமையுடன் அரசை எதிர்த்து போராட வேண்டும். காங்கிரசின் செல்வாக்கு மிக்க தலைவர்கள், வக்பு சொத்துகளை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆவணங்களை வைத்து கொண்டு, அரசை நெருக்கடியில் சிக்க வைக்க வேண்டும்.
சட்டசபையில் நடக்கும் விவாதங்களின் போது, காங்கிரசுக்கு சரியான பதிலடி தாருங்கள். தன் மீதான ஊழல்களை மூடி மறைக்க, காங்., அரசு வேறு விஷயங்களை கிளறுகிறது.
இதற்கு வாய்ப்பளிக்காமல், அரசின் தோல்விகளை கண்டித்து போராட்டம் நடத்துங்கள்.
கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், தலைவர்களுக்கு இடையே மனஸ்தாபம் இருக்க கூடாது. பஞ்சமசாலி இட ஒதுக்கீடு உச்சகட்டத்துக்கு செல்லும் வரை விடாதீர்கள். இட ஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது, தடியடி நடத்தியதற்கு, அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். தடியடி நடத்த உத்தரவிட்ட சட்டம் - ஒழுங்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திராவை பணி நீக்கம் செய்யும் வரை, போராட்டத்தை தொடருங்கள்.
பதிலடி
ஜெய மிருதுஞ்சய சுவாமிகளே, பஞ்சமசாலி போராட்டத்துக்கு ஆதரவாக நின்றுள்ளார். எனவே முடிந்த வரை இந்த விஷயத்தை வைத்து, அரசை நெருக்கடியில் சிக்க வைக்க வேண்டும். கூட்டதொடர் முடிவில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, இரு சபைகளிலும் முதல்வர் சித்தராமையா பதிலளிப்பார்.
அப்போது அவர் மத்திய அரசு நிதி வழங்குவதில், பாரபட்சம் பார்ப்பதாக குற்றம்சாட்ட வாய்ப்புள்ளது. அப்போது நீங்கள் மத்தியின் முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கிய நிதி, இன்றைய பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ள நிதி குறித்து, சரியான புள்ளி - விபரங்களுடன் விவரியுங்கள்.
முந்தைய அரசுகளுடன் ஒப்பிட்டால், அதிகமான நிதி வழங்கியது நமது அரசுதான். இதை சட்டசபையில் பேசுங்கள். பா.ஜ.,வில் நடக்கும் நிலவரங்களை, காங்கிரசார் கிளறினால் நீங்களும் சரியான பதிலடி தர வேண்டும்.
அமைச்சர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, சில அமைச்சர்கள் மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு, ஹாசனில் நடந்த காங்கிரஸ் மாநாடு குறித்து, அதிருப்தி தெரிவித்து, அக்கட்சியின் தேசிய தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம் என, பல்வேறு விஷயங்கள் உள்ளன. இதை பற்றி சட்டசபையில் வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலிடத்தின் உத்தரவுக்கு பின், பா.ஜ., தலைவர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர். இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பின், இன்று சட்டசபை கூடுகிறது.
மிச்சமுள்ள நான்கு நாட்களும், சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு இடையே காரசார விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது.