அதிகாரி தற்கொலையில் அமைச்சர் நாகேந்திரா பதவி விலக 'கெடு!' சித்தராமையாவும் ராஜினாமா செய்ய பா.ஜ., வலியுறுத்தல்
அதிகாரி தற்கொலையில் அமைச்சர் நாகேந்திரா பதவி விலக 'கெடு!' சித்தராமையாவும் ராஜினாமா செய்ய பா.ஜ., வலியுறுத்தல்
UPDATED : மே 30, 2024 10:07 PM
ADDED : மே 30, 2024 10:02 PM

பெங்களூரு, - வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி தற்கொலையில், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா, வரும் 6ம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என்று, பா.ஜ., 'கெடு' விதித்து உள்ளது. முதல்வர் சித்தராமையாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடக அரசின் பழங்குடியினர் நல துறையின் கீழ், வால்மீகி மேம்பாட்டு ஆணையம் வருகிறது. இந்த ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரு வசந்த்நகரில் உள்ளது.
இந்த ஆணையத்தில் சூப்பிரண்டாக வேலை செய்தவர் சந்திரசேகர், 52. கடந்த 27 ம் தேதி ஷிவமொகா வினோபா நகரில் உள்ள வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய வளர்ச்சிக்காக, அரசு ஒதுக்கிய 187 கோடி ரூபாய், வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுவதாகவும், இந்த விஷயத்தில் ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் பத்மநாபா, கணக்கு அதிகாரி பரசுராம் துக்கண்ணவர், வங்கி அதிகாரி சுஷிஷ்மதா ரவுல் ஆகியோர் முறைகேடு செய்வதாகவும், சந்திரசேகர் கடிதம் எழுதி வைத்து இருந்தார்.
இந்த வழக்கை சி.ஐ.டி., விசாரிக்கிறது. பத்மநாபா, பரசுராம் துக்கண்ணவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.
* வாய்மொழி உத்தரவு
சந்திரசேகர் தற்கொலைக்கு பொறுப்பு ஏற்று, பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் நாகேந்திரா, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, பா.ஜ., வலியுறுத்தியது. ஆனால், 'எனக்கும், இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் பதவி விலக மாட்டேன்' என்று, நாகேந்திரா கூறி வருகிறார்.
இந்நிலையில், பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர் அசோக் நேற்று அளித்த பேட்டி:
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், நேர்மையாக பணியாற்றிய அதிகாரி சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதற்கு காங்கிரஸ் அரசு தான் காரணம். சந்திரசேகர் எழுதிய மரண வாக்குமூல கடிதத்தில், அமைச்சர் நாகேந்திராவின் வாய்மொழி உத்தரவின்படி, பண பரிமாற்றம் நடந்ததாக கூறி உள்ளார்.
பண பரிமாற்றம் தொடர்பாக, அனைத்து தகவலையும் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். எனது அரசியல் வாழ்வில் இவ்வளவு தெளிவாக, மரண வாக்குமூலம் கடிதம் எழுதிய அதிகாரியை பார்த்தது இல்லை.
அமைச்சர் நாகேந்திரா பெயர் மரண கடிதத்தில் இருந்தும், எப்.ஐ.ஆரில் அவர் பெயர் ஏன் இல்லை. சந்திரசேகர் மரணத்திற்கு பொறுப்பு ஏற்று, முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும்.
வரும் 6ம் தேதிக்குள், நாகேந்திரா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு எதிராக மாநிலம் முழுதும் போராட்டம் நடத்துவோம். இந்த பிரச்னைக்கு தர்க்கரீதியாக தீர்வு கிடைக்கும் வரை, நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.
* என்ன நடவடிக்கை?
பண பரிமாற்றத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்து உள்ளது. இதனால் இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். தலித் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க விடமாட்டோம். எங்கள் ஆட்சியின் போது, கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்தார்.
அந்த வழக்கில் அமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என்றும், சந்தோஷ் பாட்டீல் தற்கொலை கர்நாடகாவின் கருப்பு நாள் என்றும், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார். இப்போது நாகேந்திரா மீது அவர்கள், என்ன நடவடிக்கை எடுப்பர்.
காங்கிரசாருக்கு ராமரை கண்டால் ஆகாது என்று தெரியும். ஆனால் வால்மீகியையும் பிடிக்காது என்பது, இப்போது தான் தெரிகிறது. இந்த ஆட்சியில் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஒரே அமைச்சரால் 187 கோடி ரூபாய் முறைகேடு செய்ய முடியாது. இந்த வழக்கில் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஈடுபட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் ஷிவமொகா வினோபா நகரில் உள்ள சந்திரசேகர் வீட்டிற்கு, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா நேற்று மாலை சென்றார். சந்திரசேகரின் மனைவி கவிதா, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின் அவர் அளித்த பேட்டியில், ''நேர்மையான அதிகாரி சந்திரசேகர், தற்கொலை செய்தது வருத்தம் அளிக்கிறது. அவரது மனைவி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உள்ளேன். அவர்களுக்கு நியாயம் கிடைக்க, நாங்கள் போராடுவோம்.
சந்திரசேகர் தற்கொலைக்கு பொறுப்பு ஏற்று, அமைச்சர் நாகேந்திரா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லா விட்டால் அவரை அமைச்சரவையில் இருந்து, முதல்வர் நீக்க வேண்டும். இது நடக்கா விட்டால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.
=======
பாக்ஸ்
முதல்வர் இல்லம் முற்றுகை
பா.ஜ., இளைஞர் அணியினர் கைது
அதிகாரி சந்திரசேகர் தற்கொலையில், அமைச்சர் நாகேந்திரா பதவி விலக மறுத்து உள்ளார். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி, பெங்களூரில் உள்ள முதல்வரின் கிருஷ்ணா இல்லத்தை, நேற்று மதியம் பா.ஜ., இளைஞர் அணியினர் முற்றுகையிட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பா.ஜ.,வினரை குண்டு கட்டாக துாக்கி கைது செய்து, வேன்களில் ஏற்றி சென்றனர். அப்போது, முதல்வர் சித்தராமையா, அமைச்சர் நாகேந்திராவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.