அரசியல் சாசனத்தை அழிக்க நினைக்கும் பா.ஜ.,: ராகுல்
அரசியல் சாசனத்தை அழிக்க நினைக்கும் பா.ஜ.,: ராகுல்
ADDED : நவ 09, 2024 08:08 PM

ஜாம்ஷெட்பூர்: '' அரசியல்சாசனத்தை அழிக்க பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் விரும்புகின்றன,'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: நாட்டில் இரு சித்தாந்தங்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. ஒரு பக்கம் ' இண்டியா ' கூட்டணி உள்ளது. மறுபுறம் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆகியன உள்ளன. ஒரு பக்கம் அன்பு ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகியன உள்ளன. மறுபுறம் வெறுப்புணர்வு, வன்முறை, கோபம் ஆகியன உள்ளன. ' இண்டியா' கூட்டணி அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என விரும்புகிறது. ஆனால், அதனை அழிக்க வேண்டும் என பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் நினைக்கின்றன.
கோடீஸ்வரர்களுக்கு பா.ஜ., அளிக்கும் நிதியை, மக்களுக்கு அளிக்க வேண்டும் என ' இண்டியா ' கூட்டணி விரும்புகிறது. பணவீக்கம் பெண்களை பெரிதும் பாதித்துள்ளது. அவர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு.
மக்களிடம் பணம் இருக்கும் போது அதனை அவர்கள் செலவு செய்வார்கள். இதன் மூலம் புதிய தொழிற்சாலை உருவாவதுடன், வேலைவாய்ப்பு உருவாகும். இது எங்களது கொள்கை. இளைஞர்களை பிரதமர் மோடி வேலையில்லாதவர்களாக ஆக்கி உள்ளார். பொது மற்றும் தனியார் துறைகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் என்ற தடையை அகற்றுவோம். ஜார்க்கண்டில், தலித்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். இவ்வாறு ராகுல் பேசினார்.