ADDED : நவ 24, 2024 05:38 AM
பெங்களூரு: கர்நாடக பா.ஜ.,வில் ஏற்பட்ட உட்கட்சி பூசலே, மூன்று தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்கு காரணமாகி உள்ளது.
கர்நாடகாவில் பா.ஜ.,வை வழிநடத்தி செல்ல, சக்தி வாய்ந்த அரசியல் தலைவர் இல்லாததால், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை, கட்சி மேலிடம், அவரை மாநில தலைவராக்கியது. இதனால், பசனகவுடா பாட்டீல் எத்னால், சி.டி.ரவி உட்பட பலரும் அதிருப்தி அடைந்தனர்.
இவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்காமல், கட்சியை பலப்படுத்த, மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கட்சியின் சித்தாந்தத்தை எதிர்ப்பவர்களை விமர்சிக்கிறார். அதேவேளையில், இது போதாது என்பது நேற்றைய இடைத்தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.
'இவர் மீது கட்சியில் இருப்பவர்கள் மட்டுமல்ல, வெளியாட்களும் அதிருப்தியில் உள்ளனர். இவரின் அட்ஜஸ்ட்மென்ட் அரசியல், காங்கிரசின் சில தலைவர்களுடன் உள் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னரே, கட்சியின் வியூகத்தை வகுக்கிறார். இதில் இருந்து அவர் வெளிவரவில்லை என்றால், கர்நாடகாவில் பா.ஜ., வளராது' என அதிருப்தி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளன.
உதாரணமாக, சண்டூரில் ஒவ்வொரு முறையும் புதிய முகத்தை வேட்பாளராக அறிவிக்கின்றனர். இவ்வாறு செய்தால், மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும். இந்த தேர்தல் முடிவுகள், கட்சிக்குள் தனது செல்வாக்கை விஜயேந்திரா உயர்த்த வேண்டும்.
அவரது தந்தையும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்த்து, ஆட்சி கட்டிலில் அமர வைத்தார். ஆனால் முதல்வரான பின், கட்சியின் அடிமட்ட தலைவர்களை புறக்கணித்து, கட்சியின் செல்வாக்கை மீறி வளர முயன்றார். இவரை போன்று, அவரது மகன் விஜயேந்திரா நடப்பாரா என்பது சந்தேகம் தான்.
இதுபோன்று கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலே தோல்விக்கு காரணமாகி உள்ளது.

