ADDED : மார் 12, 2024 03:35 AM

தட்சிண கன்னடா: தட்சிண கன்னடா மாவட்டத்தில் நேற்று முன்தினம் 'முல்கி ராஷ்டிரிய பில்லவா மகா மண்டல' கூட்டம் நடந்தது. இதில், மூடபித்ரி பா.ஜ., - எம்.எல்.ஏ., உமாநாத் கோட்யான் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது:
நம் சமுதாய மக்கள், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பெல்தங்கடியில் காங்கிரசின் ரக் ஷித் சிவராம் தோல்வி அடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
தட்சிண கன்னடாவில் பில்லவா சமுதாய மக்கள், அதிகளவில் இருந்தும், அவர் எப்படி தோற்றுப்போனார்? நம் சமுதாய வேட்பாளருக்கு ஆதரவளிக்க உங்களுக்கு தைரியம் இல்லையா?
கட்சியினர் ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று தயக்கத்துடன் இருந்தால் பில்லவா சமுதாயம் எப்படி வளரும்?
பில்லவா சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளருக்கு, நம் சமுதாய மக்கள் எவ்வளவு ஆதரவு அளிக்கின்றனர் என்பது முக்கியம். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் பில்லவா வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ.,வில் இருந்து கொண்டே, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பேசியது, வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது என, அக் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.

