ADDED : மார் 06, 2024 02:26 AM

போபால், மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வருவதாக, ஆளும் பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது அக்கட்சியின் எம்.பி., பிரக்யா சிங் தாக்குர் குற்றம் சாட்டிஉள்ளார்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, போபால் லோக்சபா தொகுதியில் பா.ஜ., - எம்.பி.,யாக இருப்பவர் பிரக்யா சிங் தாக்குர் உள்ளார்.
சமீபத்தில் பா.ஜ., தலைமை வெளியிட்ட லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
இந்நிலையில், தன் தொகுதிக்கு உட்பட்ட கஜுரியா காலா பகுதியில் நேற்று முன்தினம் பிரக்யா சிங் ஆய்வுக்கு சென்றார்.
அப்போது, அத்தொகுதியைச் சேர்ந்த சிறுமியர் கூட்டமாக சென்று, தங்கள் பள்ளிக்கு அருகே சட்டவிரோதமாக இயங்கி வரும் மதுபான கடையால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றம் சாட்டினர்.
இதேபோல் அப்பகுதி பெண்களும், இந்த மதுபான கடையால், தங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும், சிலர் குடித்து விட்டு தங்கள் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவதாகவும் வேதனையுடன் முறையிட்டனர்.
உடனே, அவர்களுடன் அங்குச் சென்று, அந்த கடையை அடித்து நொறுக்கியதுடன் மதுபாட்டில்களையும் உடைத்து சேதப்படுத்தினார். இந்த மதுபான கடை, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுதேஷ் ராய்க்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதுதொடர்பாக பிரக்யா சிங் கூறுகையில், “பெண்கள், சிறுமியரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ள இந்த கடையை முழுதும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக மதுபான கடையை நடத்தி வரும் எம்.எல்.ஏ., சுதேஷ் ராயின் பதவியை பறிக்க பா.ஜ., தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

