தர்மேந்திர பிரதானுக்கு பாஜ என்றும் உறுதுணையாக இருக்கும்: நிதின் நபின்
தர்மேந்திர பிரதானுக்கு பாஜ என்றும் உறுதுணையாக இருக்கும்: நிதின் நபின்
ADDED : ஜூலை 25, 2026 05:06 PM

புதுடில்லி: தர்மேந்திர பிரதானுக்கு கட்சி உறுதுணையாக இருக்கும் என்று பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் கூறி உள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், மதிப்பெண் குளறுபடிகள் ஆகியவற்றை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரியும் டில்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி இயக்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் மத்திய அரசு தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தது.
போராட்டம், பேச்சுவார்த்தை என்ற சூழலுக்கு மத்தியில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை இன்று ராஜினாமா செய்தார். தனது 2 பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை அவர் பிரதமர் மோடிக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இந் நிலையில், தர்மேந்திர பிரதானுக்கு கட்சி உறுதுணையாக இருக்கும் என்று பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் கூறி உள்ளார். தமது எக்ஸ் வலைதள பதிவில் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா முடிவை மேற்கோள் காட்டி அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது;
மத்திய கல்வித்துறை அமைச்சராக, நாட்டின் கல்வியை சீரமைப்பதிலும், வரலாற்று சிறப்புமிக்க தேசிய கல்விக் கொள்கைளை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும் தர்மேந்திர பிரதான் முக்கிய பங்கை ஆற்றினார்.
பல்வேறு நலன்களை முன்னிறுத்தி அவர் பதவியில் இருந்து விலக எடுத்த முடிவு, பொது வாழ்வில் நேர்மை, தன்னலமற்ற சேவையின் மிக உயர்ந்த நிலையை வெளிக்காட்டுகிறது. அவரின் முடிவுக்கு கட்சி என்றைக்கும் உறுதுணையுடன் நிற்கிறது. தர்மேந்திர பிரதானின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு நிதின் நபின் குறிப்பிட்டு உள்ளார்.
