ADDED : மார் 09, 2024 11:55 PM

போபால்: லோக்சபா தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பச்சோரி, முன்னாள் எம்.பி., கஜேந்திர சிங் ராஜுகேடி உள்ளிட்ட ஏராளமானோர் நேற்று பா.ஜ.,வில் இணைந்தனர்.
பா.ஜ., ஆளும் ம.பி.,யில், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பச்சோரி, முன்னாள் எம்.பி., கஜேந்திர சிங் ராஜுகேடி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சஞ்சய் சுக்லா, அர்ஜுன் பாலியா, விஷால் படேல் உள்ளிட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி, முதல்வர் மோகன் யாதவ், மாநில பா.ஜ., தலைவர் வி.டி.சர்மா, முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று பா.ஜ.,வில் இணைந்தனர்.
சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவராக இருந்த சுரேஷ் பச்சோரி, ராணுவ இணை அமைச்சராகவும், நான்கு முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார். மேலும், காங்கிரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
பழங்குடியினத் தலைவரான முன்னாள் எம்.பி., கஜேந்திர சிங் ராஜுகேடி, 1998, 1999 மற்றும் 2009ல், காங்., சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி.,யாக பதவி வகித்துள்ளார்.
பா.ஜ.,வில் இணைந்த பின், சுரேஷ் பச்சோரி கூறுகையில், ''நாட்டை ஜாதியின் அடிப்படையில் காங்., பிளவுபடுத்துகிறது. இதனால், ஜாதி மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
''மேலும், தலைமையும், கொள்கையும் இல்லாமல் காங்., தள்ளாடுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறேன்,'' என்றார்.
