கேரளாவில் மார்க்சிஸ்ட் - காங்கிரசுக்கு பா.ஜ., முடிவு கட்டும்: பிரகாஷ் ஜாவடேகர்
கேரளாவில் மார்க்சிஸ்ட் - காங்கிரசுக்கு பா.ஜ., முடிவு கட்டும்: பிரகாஷ் ஜாவடேகர்
ADDED : பிப் 04, 2024 11:29 PM

புதுடில்லி: ''கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., - காங்., என்ற இரு கட்சிகளின் ஆதிக்கத்துக்கு, பா.ஜ., முடிவு கட்டும். வரும் லோக்சபா தேர்தலில், குறைந்தது ஐந்து தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சரும், அம்மாநில பா.ஜ., மேலிட பொறுப்பாளருமான பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, ஆளும் மார்க்சிஸ்ட் - எதிர்க்கட்சியான காங்., என, இரு கட்சிகளை சுற்றியே அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. தேர்தல்களிலும், இரு கட்சிகளுக்கும் இடையே தான் இரு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் நேற்று, முன்னாள் மத்திய அமைச்சரும், அம்மாநில பா.ஜ., மேலிட பொறுப்பாளருமான பிரகாஷ் ஜாவடேகர் பேட்டி ஒன்றில் கூறியதாவது:
கடந்த 2019ல், கேரளாவில் உள்ள அனைத்து தரப்பினரும், ராகுல் பிரதமராவார் என கூறினர். ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை.
கேரள மக்கள் அனைவரும் தற்போது பிரதமர் மோடியை நம்புகின்றனர். அவர் மீண்டும் வெற்றி பெறுவார் என்பதை உணர்ந்துள்ளனர்.
கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஏன் ஓட்டளித்தோம் என்பதை எண்ணி அம்மாநில மக்கள் தற்போது வருத்தப்படுகின்றனர். இந்த முறை பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க அவர்கள் தயாராகி விட்டனர். வரும் லோக்சபா தேர்தலில், குறைந்தது ஐந்து தொகுதிகளிலாவது பா.ஜ., வெற்றி பெறும்.
மார்க்சிஸ்ட் - காங்., என்ற இரு கட்சிகளின் இரு முனை அரசியலுக்கு முடிவு கட்டி, பா.ஜ., புதிய அத்தியாயத்தை துவங்கும். கிறிஸ்துவ மக்களின் நலனுக்காக, மத்தியில் ஆளும் பா.ஜ., பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
இதனால், கேரளாவில் உள்ள கிறிஸ்துவர்களின் கணிசமான ஓட்டுகள், இம்முறை நிச்சயம் எங்களுக்கு கிடைக்கும். மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்; மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில், 19ல், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.