ADDED : ஏப் 25, 2025 11:25 PM
புதுடில்லி:டில்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் ராஜா இக்பால் சிங் வெற்றி பெற்றார்.
டில்லி மாநகராட்சிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தாலும், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.
டில்லி மாநகராட்சி விதிமுறைப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரலில் மேயர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். முதல் ஆண்டுக்கான மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது ஆண்டில் பொதுப்பிரிவு, மூன்றாம் ஆண்டு பட்டியலின பிரிவு, நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டுகளில் பொதுப்பிரிவு என மேயர் மற்றும் துணை மேயர் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தலைநகர் டில்லியில் இருந்த மூன்று மாநகராட்சிகளும் இணைக்கப்பட்டு 250 வார்டுகள் கொண்ட டில்லி மாநகராட்சிக்கு, 2022 டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது.
ஆம் ஆத்மி - 134 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. பா.ஜ., - 104, காங்கிரஸ் - 9 மற்றும் சுயேச்சை - 3 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.
ஆம் ஆத்மி சார்பில் மேயர் வேட்பாளராக ஷெல்லி ஓபராய் அறிவிக்கப்பட்டார். ஆனால், நியமன உறுப்பினர்களுக்கும் மேயர் தேர்தலில் ஓட்டுரிமை வழங்கி துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார்.
இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் மேயர் தேர்தல் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் ஷெல்லி ஓபராய் முறையிட்டார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நியமன உறுப்பினர்களுக்கு கவர்னர் வழங்கியிருந்த ஓட்டுரிமையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, 2023 பிப்ரவரி மாதம் நடந்த மேயர் தேர்தலில் ஷெல்லி ஓபராய் வென்று மேயராக பதவியேற்றார்.
அதைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டு ஏப்ரலில் நடத்தப்பட வேண்டிய தேர்தலின் போது, ஆம் ஆத்மி, பா.ஜ., கவுன்சிலர்கள் மோதல், கெஜ்ரிவால் கைது போன்ற பல காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டு, நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த மகேஷ் குமார் மேயர் பதவியை ஏற்றார்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நேற்று மதியம், 2:00 மணிக்கு நடத்தப்படும் என மாநகராட்சி செயலர் அறிவித்து இருந்தார்.
இதற்கிடையில் கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் இந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பல கவுன்சிலர்கள் பா.ஜ.,வுக்கு தாவினர்.
சில மாதங்களாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பல கவுன்சிலர்கள் தாவியதைத் தொடர்ந்து, மாநகராட்சியில் பா.ஜ.,வின் பலம் 119 ஆக அதிகரித்தது.
மேலும், மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கும் மேயர் தேர்தலில் ஓட்டுரிமை உள்ளது.
இந்நிலையில் அறிவிக்கப்பட்ட மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என, ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே அறிவித்து விட்டது.
அக்கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிஷி சிங், “சட்டசபையைப் போலவே மாநகராட்சியிலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவோம்,”என, கூறியுள்ளார்.
டில்லி மாநகராட்சி மேயர் பதவிக்கு சர்தார் ராஜா இக்பால் சிங், துணை மேயர் பதவிக்கு ஜெய் பகவான் யாதவ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில், மன்தீப் சிங் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மேயராக ராஜா இக்பால் சிங், துணை மேயராக ஜெய் பகவான் யாதவ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.