கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ., விடிய விடிய... ஆலோசனை: அமைச்சர் பதவிகள் பங்கிடுவதில் தலைவலி
கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ., விடிய விடிய... ஆலோசனை: அமைச்சர் பதவிகள் பங்கிடுவதில் தலைவலி
UPDATED : ஜூன் 09, 2024 03:02 AM
ADDED : ஜூன் 08, 2024 11:37 PM

புதுடில்லி:அமைச்சர் பதவிகள் பங்கீடு தொடர்பாக, கூட்டணி கட்சி தலைவர்களுடன் அமித் ஷா, ராஜ்நாத் சிங் விடிய விடிய ஆலோசனை நடத்தினர். தேர்தலுக்கு முந்தைய தொகுதி பங்கீட்டை விட, அமைச்சரவை பங்கீடு பா.ஜ.,வுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
![]() |
விழா ஏற்பாடுகள் ஒரு பக்கம் இருந்தாலும், பிரதமருடன் பதவியேற்க போகும் அமைச்சர்கள் யார் என்பதே முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.
பேரம் பேசுகின்றன
கடந்த இரண்டு முறை ஆட்சி அமைத்தபோது, இல்லாத சிக்கல் தற்போது பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது. அதிக இடங்களில் பா.ஜ., வென்றாலும், கூட்டணி கட்சிகளே புதிய அரசின் தலையெழுத்தை நிர்ணயிக்க உள்ளன.
நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் போன்றவை, முந்தைய தேர்தல்களின் பின்னரும் பதவிகளுக்காக முரண்டு பிடித்து, பா.ஜ.,வுடன் முட்டிக் கொண்ட கட்சிகளே.
பா.ஜ.,வுக்கு தனிப் பெரும்பான்மை இருந்தபோதே மல்லுக்கட்டிய அவை, தற்போது மாறியுள்ள சூழலில் தங்கள் விருப்பங்களை அழுத்தமாக முன் வைத்து பேரம் பேசுகின்றனர்.
உள்துறை, ராணுவம், நிதி, வெளியுறவு ஆகிய நான்கு துறைகளை விட்டுத்தர, பா.ஜ., தயாராக இல்லை. ரயில்வே, சாலை போக்குவரத்து, சட்டம், தகவல் தொழில்நுட்பம், கல்வி ஆகியவற்றையும் தனக்கே வைத்துக் கொள்ள விரும்புகிறது.
![]() |
சிபாரிசு
பா.ஜ.,வின் முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்களும் தயக்கம் இல்லாமல் கோரிக்கை வைக்கின்றனர். ஒவ்வொருவரின் சார்பாகவும் எங்கெங்கோ இருந்து சிபாரிசுகளும் வருகின்றன. இதனால் நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா அடங்கிய குழு திணறுகிறது. கடந்த இரண்டு நாட்களாக நடந்த ஆலோசனை நேற்றும் விடிய விடிய நீடித்தது.
கடந்த இரண்டு ஆட்சியின்போது, யார் யார் அமைச்சராவர் என்பதில் பல விவாதங்கள் நடந்த போதும், மோடி பல ஆச்சரியமான தேர்வுகளை செய்திருந்தார்.
தற்போதும் அதே பாணியை அவர் பின்பற்றக்கூடும் என்பதால், இன்றைய பதவியேற்பு விழாவுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.