ADDED : ஜன 03, 2024 07:11 AM

திருச்சூர்: கேரள மாநிலம், திருச்சூரில் இன்று(ஜன.,3) நடக்கும் பா.ஜ., மகளிர் அணி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.
கேரள மாநிலம், திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில், பா.ஜ. மகளிர் அணி மாநாடு இன்று நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
இன்று மதியம், 2:00 மணிக்கு கூட்டநெல்லுார் என்னுமிடத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் பிரதமரை, திருச்சூர் கலெக்டர் கிருஷ்ணா தேஜா, திருச்சூர் மேயர் வர்க்கீஸ் ஆகியோர் வரவேற்கின்றனர்.
தொடர்ந்து, சாலை மார்க்கமாக திருச்சூர் நகரை வந்தடையும் பிரதமரை, பா.ஜ., மாநில தலைவர் சுரேந்திரன் வரவேற்கிறார். இதையடுத்து, பிரதமர் சுவராஜ் ரவுண்டில் ஒரு கிலோ மீட்டர் துாரம் நடந்து சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.
மாலை, 3:00 மணிக்கு பா.ஜ., மகளிர் அணி மாநாடு துவங்குகிறது. அதில், பங்கேற்று பிரதமர் பேசுகிறார். மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் தேசிய-, மாநில தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, திருச்சூர் சிட்டி போலீஸ் கமிஷனர் அன்கிட் அசோக் அறிக்கை: பிரதமரின் வருகையை தொடர்ந்து, நாளை (இன்று) காலை, 11:00 மணி முதல் நகரிலும், சுற்று வட்டாரங்களிலும் போக்குவரத்து கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, காலை முதல் சுவராஜ் ரவுண்டிலும், அருகிலுள்ள சாலைகளிலும் வாகன 'பார்க்கிங்' தடை செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையம் ஆகிய பகுதிகளுக்கு செல்வோர் மற்றும் பல்வேறு தேர்வு மையங்களுக்கு செல்வோர், நகரிலும் சுற்றுப் பகுதிகளிலும் ஏற்படுத்திய போக்குவரத்து கட்டுப்பாடுகள், மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.