விவசாயிகளுக்கு அவமானம்: கங்கனா கருத்துக்கு ராகுல் கண்டனம்
விவசாயிகளுக்கு அவமானம்: கங்கனா கருத்துக்கு ராகுல் கண்டனம்
UPDATED : ஆக 27, 2024 10:38 AM
ADDED : ஆக 27, 2024 09:07 AM

புதுடில்லி: 'விவசாயிகளை தொடர்ந்து பா.ஜ., அரசு அவமானப்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ., எம்.பி.,யின் கீழ்த்தரமான கருத்துக்கள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட அவமானம்' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பா.ஜ., அரசு தவறிவிட்டது. விவசாயிகளை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது.
தங்களின் 378 நாள் போராட்டத்தில் 700 சக விவசாயிகளைத் தியாகம் செய்தவர்கள் அந்நிய நாட்டு சதிகாரர்கள் என்று பா.ஜ., எம்.பி., கூறுவது பா.ஜ., அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டுள்ள மனநிலையை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இதுபோன்ற கீழ்த்தரமான கருத்துக்கள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட அவமானம்.
நிவாரணம்
உயிரிழந்த விவசாயிகளுக்குப் பாராளுமன்ற அவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தக் கூட மோடி மறுத்துவிட்டார். போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உருவாக்கிய கமிட்டி இன்னும் செயல்படாமல் உள்ளது. இதுநாள் வரை தங்களின் நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை.
உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்பட வில்லை. இதற்கெல்லாம் உச்சமாக விவசாயிகளைத் பா.ஜ., தவறாகச் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
பா.ஜ., எம்.பி., கங்கனா, போராட்டம் நடத்திய விவசாயிகள் குறித்து தெரிவித்த கருத்துக்கு, ராகுல் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கங்கனாவின் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை; கட்சி சார்பில் பேச கங்கனாவுக்கு அதிகாரமும் இல்லை என்று பா.ஜ., விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.