ஆம் ஆத்மிக்கு தொகுதி தாரைவார்ப்பு காங்., குறித்து பா.ஜ., விமர்சனம்
ஆம் ஆத்மிக்கு தொகுதி தாரைவார்ப்பு காங்., குறித்து பா.ஜ., விமர்சனம்
ADDED : பிப் 26, 2024 03:47 AM
புதுடில்லி : காங்கிரசில் தங்களுடைய குடும்பம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காகவே, குஜராத்தின் பருச் தொகுதியை ஆம் ஆத்மிக்கு தாரை வார்த்துள்ளதாக, பா.ஜ., விமர்சித்துள்ளது.
லோக்சபா தேர்தல் தொடர்பாக, சில மாநிலங்களில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு செய்துள்ளன.
இதில், குஜராத்தில் 26 தொகுதிகளில், 24 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டன. அதே நேரத்தில் பருச் மற்றும் பாவ்நகர் தொகுதிகள் ஆம் ஆத்மிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது படேலின் சொந்த ஊரான பருச் தொகுதி, ஆம் ஆத்மிக்கு ஒதுக்கப்பட்டது சர்ச்சை எழுப்பிஉள்ளது.
இந்தத் தொகுதியில் அஹமது படேலின் மகன் பைசல் படேல் நிறுத்தப்படுவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்தத் தொகுதியை ஆம் ஆத்மிக்கு விட்டுக் கொடுத்ததற்கு, அஹமது படேலின் மகள் மும்தாஜ் படேல் எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், காங்கிரசில் இருந்து பா.ஜ.,வில் சேர்ந்துள்ள, செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில், நேற்று வெளியிட்டுள்ள பதிவில், 'அஹமது படேல் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கும் இடையேயான மோதல் அனைவரும் அறிந்தது. தற்போது இளவரசர் பழிவாங்கி விட்டார்'' என, கூறியுள்ளார்.
பா.ஜ.,வின் தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மால்வியா பதிவிட்டுள்ள பதிவில், 'கட்சியில் தங்களுடைய குடும்பம் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
'அதனால்தான், அஹமது படேலின் பங்களிப்பை, நினைவுகளை அழிக்க அந்தக் குடும்பம் நினைக்கிறது. பயன்படுத்தி துாக்கி எறிவதுதான், அந்தக் குடும்பத்தின் வழக்கம்' என, குறிப்பிட்டுள்ளார்.

