பா.ஜ., உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சம் கர்நாடக மேலிட பொறுப்பாளருக்கு நெருக்கடி
பா.ஜ., உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சம் கர்நாடக மேலிட பொறுப்பாளருக்கு நெருக்கடி
ADDED : டிச 07, 2024 11:02 PM

பெங்களூரு: 'கட்சிக்கு எதிராக செயல்படும் எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம் ஹெப்பார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வாலிடம் தலைவர்கள் வலியுறுத்தினர்.
கர்நாடக பா.ஜ.,வில் தற்போது கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. தலைவர் விஜயேந்திரா தலைமையில் ஒரு அணியும், மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தலைமையில், மற்றொரு அணியும் உருவாகி உள்ளது.
இதனால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்சிக்கு எதிராக எத்னால் செயல்படுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொண்டர்கள் வலியுறுத்த ஆரம்பித்தனர்.
இதையடுத்து எத்னாலுக்கு, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. சமீபத்தில் டில்லி சென்ற எத்னால், மேலிட தலைவர்கள் சிலரை சந்தித்து, விஜயேந்திராவுக்கு எதிராக புகார் செய்தார். காங்கிரசுடன் சமரச அரசியல் செய்யும் விஜயேந்திராவை, தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
* மேலிட முடிவு
இதையடுத்து, கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலுக்கு தீர்வு காண, கட்சியின் மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால் நேற்று காலை பெங்களூரு வந்தார். மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் அவரை, முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேசினர்.
'கட்சிக்கு எதிராக எத்னால் செயல்படுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
பின், செய்தியாளர்களிடம் ராதாமோகன் தாஸ் அகர்வால் கூறியதாவது:
பா.ஜ.,வில் அணிகள் இல்லை. அனைவரும் ஒன்றாக செயல்படுகின்றனர். விஜயேந்திராவை தலைவராக நியமிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தது, கட்சி மேலிடம் தான். கட்சி மேலிட முடிவை யாரும், கேள்வி கேட்க முடியாது.
யாரை தலைவராக மேலிடம் நியமிக்கிறதோ, அவரை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் தான் தலைவராக தொடர்வார். விஜயேந்திரா மீதும் சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அதை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கிறேன். கட்சிக்கு எதிராக செயல்படுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
* தர்மசங்கடம்
இதையடுத்து நேற்று மாலை, ராதாமோகன் தாஸ் அகர்வால் தலைமையில், கட்சியின் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், எம்.பி., கோவிந்த் கார்ஜோள், எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா, எம்.எல்.சி., ரவி, முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, முன்னாள் எம்.பி., நளின்குமார் கட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் துவங்கியதும், “கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் எத்னால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, சதானந்த கவுடா வலியுறுத்தினார்.
“எத்னாலை கட்சி மேலிடம் கண்காணித்து வருகிறது. அவருக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்,” என, ராதாமோகன் தாஸ் அகர்வால் கூறினார்.
* குழு அமைக்க...
பா.ஜ., சின்னத்தில் வெற்றி பெற்ற சோமசேகர், சிவராம் ஹெப்பார் உள்ளிட்டோர் கட்சிக்கு துரோகம் செய்து வருகின்றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து மேலிட தலைவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக, பொறுப்பாளர் கூறினார்.
இதையடுத்து மூன்று தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. தோல்விக்கான காரணத்தை கண்டறிய குழு அமைக்கும்படி, விஜயேந்திராவுக்கு உத்தரவிடப்பட்டது. பெலகாவியில் நடக்கும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில், அரசுக்கு எதிராக போராடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
* எனது முகம்
கூட்டம் முடிந்த பின், விஜயேந்திரா கூறுகையில், ''எத்னால் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம் ஹெப்பார் மீது, நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளோம்,'' என்றார்.