பா.ஜ., தேசிய குழு கூட்டம் பிப்., 17 -- 18ல் நடக்கிறது
பா.ஜ., தேசிய குழு கூட்டம் பிப்., 17 -- 18ல் நடக்கிறது
ADDED : பிப் 16, 2024 02:33 AM

லோக்சபா தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், பா.ஜ.,வின் தேசிய குழு கூட்டம் புதுடில்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது.
மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் ஆட்சிக் காலம் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. ஆகையால், லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது.
இதற்கான பணிகளை தலைமை தேர்தல் கமிஷன் முன்னெடுத்துள்ளது. தேர்தலை ஒட்டி காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரங்களை துவக்கிஉள்ளன.
இந்நிலையில், பா.ஜ.,வின் தேசிய குழு கூட்டம் நாளை டில்லியில் துவங்குகிறது. அங்குள்ள பாரத் மண்டபத்தில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இரண்டு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
நாளை பிற்பகல் 3:00 மணிக்கு துவங்கும் கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தேர்தல் யுக்திகள், கருத்துக்கணிப்பு ஆய்வுகள் குறித்தும் இரண்டு நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
இரண்டாம் நாளான நாளை மறுநாள், பா.ஜ.,வின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அப்போது, மோடி அரசின் 10 ஆண்டு கால சாதனை குறித்து தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அதேசமயம், தற்போதுள்ள சவால்கள், அவற்றை எதிர்கொள்ளுதல் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, விவாதங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, சட்டப்பிரிவு 370 ரத்து, ஜி - 20 மாநாடு நிகழ்வு போன்றவற்றை வெற்றிகரமாகச் செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தின் இரண்டாவது நாளில், பிரதமர் நரேந்திர மோடி நிறைவு உரை ஆற்ற உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.,வின் பஞ்சாயத்து அளவிலான பிரதிநிதிகள், தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய கவுன்சில் உறுப்பினர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 11,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ., நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -