அமைச்சர் லட்சுமிக்கு ஆபாச அர்ச்சனை பா.ஜ., -- எம்.எல்.சி., ரவி அதிரடி கைது
அமைச்சர் லட்சுமிக்கு ஆபாச அர்ச்சனை பா.ஜ., -- எம்.எல்.சி., ரவி அதிரடி கைது
ADDED : டிச 20, 2024 05:32 AM

பெலகாவி: அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை ஆபாசமாக திட்டியதாக கூறி, பா.ஜ., -- எம்.எல்.சி., ரவியை, சுவர்ண விதான் சவுதாவில் வைத்து, லட்சுமியின் ஆதரவாளர்கள் தாக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லட்சுமி தரப்பு புகாரில், ரவியை போலீசார் கைது செய்தனர்.
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் உள்ள மேல்சபையில் நேற்று உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் ஆஜராகி இருந்தார்.
அப்போது, அம்பேத்கர் பற்றி அமித்ஷா கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ., உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர். சபையில் கூச்சல், குழப்பம் நீடித்தது. இதனால் சபையை, அரை மணி நேரத்திற்கு, தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஒத்தி வைத்தார்.
விஸ்வரூபம்
இந்நிலையில், மேல்சபை தலைவரின் அலுவலகத்திற்கு சென்ற லட்சுமி, போராட்டத்தின் போது பா.ஜ., உறுப்பினர் ரவி தன்னை ஆபாசமாக திட்டினார் என்று கூறி கண்ணீர் விட்டார். இதையடுத்து சபையில் உறுப்பினர்கள் பேசிய ஆடியோ குரல் பதிவுகளை சேகரிக்கும்படி ஊழியர்களுக்கு, தலைவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், லட்சுமியை ஆபாசமாக திட்டியதாக கூறி ரவியை கண்டித்து, சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
அம்மா இல்லையா?
லட்சுமி, பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அவரது ஆதரவாளர்கள் சுவர்ண விதான் சவுதா முன்பு கூடி ரவியை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில், ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் மீண்டும் கூடிய நிலையில், அமைச்சர் லட்சுமி, ரவியை பார்த்து, 'உனக்கு அம்மா இல்லையா; மனைவி இல்லையா; மகள் இல்லையா' என்று ஒருமையில் ஆவேசமாக பேசினார்.
கூட்டம் முடிந்ததும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக்கை சந்தித்து பேசிவிட்டு, மேல்சபையை நோக்கி ரவி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சூழ்ந்த சிலர், 'நாங்கள் லட்சுமியின் ஆதரவாளர்கள். எங்கள் தலைவியை பார்த்து எப்படி ஆபாசமாக பேசுவாய்' என்று கூறி அவரை தாக்க முற்பட்டனர். அதிர்ச்சி அடைந்த சபை பாதுகாவலர்கள், ரவியை பத்திரமாக அழைத்து சென்றனர்.
சுவர்ண விதான் சவுதாவில் நுழையும் நான்கு பக்க நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டன. ரவி மீது தாக்குதல் நடத்துவதற்காக ஒரு கும்பல், வளாகத்திற்குள் சுற்றியது. இதனால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. லட்சுமியின் ஆதரவாளர்கள் அனைவரும் சுவர்ண விதான் சவுதாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், ரவி உள்ளிட்ட பா.ஜ., உறுப்பினர்கள் சுவர்ண விதான் சவுதாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரவி கூறுகையில், ''அமைச்சர் லட்சுமியை நான் ஆபாசமாக எதுவும் பேசவில்லை. வீடியோ, ஆடியோ உரையாடல்களை ஆய்வு செய்தால் உண்மை தெரிய வரும். எம்.எல்.சி., ஆன எனக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. இங்கு வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. மக்கள் பிரதிநிதியான எனக்கு பாதுகாப்பு இல்லை என்றால், மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்,'' என்று ஆவேசமாக கூறினார்.
இதற்கிடையில், அமைச்சர் லட்சுமியின் உதவியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு வந்த ஹிரேபாகேவாடி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ரவியை கைது செய்து குண்டு கட்டாக துாக்கி சென்று வேனில் ஏற்றி சென்றனர். பா.ஜ.,வினரையும் தனியாக வேனில் ஏற்றி சென்றனர்.
ரவி இருந்த போலீஸ் வேன் முன், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் அரவிந்த் பெல்லத், எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.